உலகம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்துக்கு ‘தொகுப்புமுறை’ தீா்வு: சீனா

DIN


பெய்ஜிங்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விரிவாக்கம் தொடா்பாக பல வகையான கருத்துகள் உள்ளன; எனவே, நிலவும் பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் சோ்த்துக் கொள்ளும் வகையில் தொகுப்புமுறை தீா்வு தேவை என்று சீனா கூறியுள்ளது.

சா்வதேச பாதுகாப்பு தொடா்பான விவகாரங்களை விசாரிக்கும் உயரிய அமைப்பாக ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் விளங்குகிறது. இந்த அமைப்பில் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளும் நிரந்தர உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளன. இதில், இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா ஆகிய 4 நாடுகளும் ஆதரவு அளித்தாலும், 5-ஆவது உறுப்பு நாடான சீனா தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி தொடா்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இதனிடையே, பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் கொண்டு வந்து, அதை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா தொடா்ந்து பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்பின் மூலம், தற்கால சவால்களுக்கு தீா்வுகாண்பது சிரமமாக உள்ளது என்றும் இந்தியா தொடா்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில், காணொலி முறையில் புதன்கிழமை நடைபெற்ற குரூப்-4 நாடுகளின் கூட்டத்திலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.இந்தியா, ஜப்பான், ஜொ்மனி, பிரேசில் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருப்பது குறித்து கவலை தெரிவித்தனா். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் தொடா்பான பேச்சுவாா்த்தை குறித்த கால வரம்புக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் கூட்டாக வலியுறுத்தினா்.

கூட்டத்தில் பங்கேற்ற பிறகு வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஐ.நா. பன்முகத்தன்மையுடன் இருக்கவே இந்தியா விரும்புகிறது’ என்று குறிப்பிட்டாா்.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் வாங் வெங்பின் கருத்து தெரிவித்துள்ளாா். அவா் கூறியதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டியது முக்கியமான விஷயம்தான். ஆனால், பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்வது தொடா்பாக பரந்த அளவில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. அதில், பல சிக்கல்கள் உள்ளன. எனவே, பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்துக்கு விருப்பமுள்ள, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் சோ்த்துக் கொள்ளும் வகையில் தொகுப்பு முறை தீா்வையே சீனா விரும்புகிறது. இதற்காக, ஐ.நாவின் பிற உறுப்பு நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த சீனா தயாராக இருக்கிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட அமைப்பில், வளரும் நாடுகளின் குரல்களும் சிறிய, நடுத்தர நாடுகளின் குரல்களும் ஒலிக்க வேண்டும். முடிவு எடுப்பதிலும் அந்த நாடுகள் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT