உலகம்

3 கோடி மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம்: உலக பணக்காரர்கள் உதவ ஐநா அழைப்பு

18th Sep 2020 04:39 PM

ADVERTISEMENT

உலகில் 3 கோடி மக்கள் வறுமை பாதிப்பால் உணவுக்குக் கூட வழி இல்லாமல் இறக்கும் தருவாயில் இருப்பதால் அவர்களுக்கு உதவ உலகப் பணக்காரர்களுக்கு ஐக்கிய நாடுகள் அவை அழைப்பு விடுத்துள்ளது.

கரோனா தொற்றுக்காலத்தில் உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஐநா அவையின் தரவுகளின் படி கரோனா நெருக்கடியால் உலகில் வறுமையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரிக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை பேசிய ஐக்கிய நாடுகள் அவையின் உணவுத் திட்டத் தலைவர் டேவிட் பீஸ்லி வறுமையால் பாதிக்கப்படும் மக்களை மீட்க உலகப் பணக்காரர்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அவர் தனது உரையில், “கரோனா நெருக்கடியால் உலகம் முழுவதும் 27 கோடி மக்கள் பட்டினியின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களில் 3 கோடி பேர் பட்டினியால் இறக்கும் அபாயத்தில் உள்ளனர்.” எனக் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய அவர், “உலகளவில் சுமார் 270 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். இந்த ஆண்டு 138 மில்லியன் மக்களை கூடுதலாக வறுமையை நோக்கி செல்ல உள்ளனர். உலக உணவுத் திட்டத்திலிருந்து அவர்களுக்கு உதவி கிடைக்காவிட்டால் அவர்கள் இறக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர்.” எனத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் கரோனா தொற்று பாதிப்பு நெருக்கடி நேரத்தில் அமெரிக்காவில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 19% அதிகரித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் நிறுவனர்  ஜெஃப் பெசோஸ்ஸின் சொத்து மதிப்பு 36.2 பில்லியன் டாலரும், முகநூல் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு சுமார்  30.1 பில்லியன் டாலரும், டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாகி எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 14.1 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள ஐநா,   “அசாதாரண நிலையில் அதிக செல்வம் உள்ளவர்கள் வறுமையில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டிய நேரம் இது.” எனத் தெரிவித்துள்ளது.

Tags : UN
ADVERTISEMENT
ADVERTISEMENT