உலகம்

பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான்: மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா குற்றச்சாட்டு

17th Sep 2020 02:04 AM

ADVERTISEMENT

 

ஜெனீவா: பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான் என, மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா குற்றஞ்சாட்டியது.
ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்சிலின் 45ஆவது அமர்வில் பாகிஸ்தான் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து இந்தியத் தூதர் செவ்வாய்க்கிழமை பேசியது: 
பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட இன, மத சிறுபான்மையினர் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர். எனவே, மனித உரிமைகள் குறித்துப் பேசுவதற்கு அங்கிருந்து வரும் யாருக்கும் தகுதியில்லை.
பாகிஸ்தான் தனது சுயநலத்துக்காகவும், தவறான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் அடிப்படையிலும் இந்தியாவை இழிவுபடுத்துவது வழக்கமாகிவிட்டது. 
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்ட ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்ததை பெருமையுடன் ஒப்புக்கொள்ளும் பிரதமரைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து மனித உரிமைகள் குறித்துப் பேச எவருக்கும் தகுதியில்லை. 
தனது சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்காக, துன்புறுத்தல், அவதூறுச் சட்டங்கள், கட்டாய மதமாற்றங்கள், இலக்கு வைக்கப்பட்ட கொலைகள், குறுங்குழுவாத வன்முறை, நம்பிக்கை அடிப்படையிலான பாகுபாடு ஆகியவை மூலம் இன, மத சிறுபான்மையினருக்கு பாகிஸ்தானில் எதிர்காலம் இல்லை என்பதை அந்நாடு உறுதிப்படுத்துகிறது.
அங்கு ஆயிரக்கணக்கான சீக்கிய, இந்து, கிறிஸ்தவ சிறுபான்மை பெண்கள், சிறுமிகள் கடத்தல்கள், கட்டாயத் திருமணங்கள், மத மாற்றங்களுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். 
பத்திரிகையாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஆளும் கட்சி அதிருப்தியாளர்கள் மிரட்டலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். ஊடகவியலாளர்கள் கொல்லப்படும் நாடாகவும், கொலையாளிகள் பயமின்றித் திரியும் நாடாகவும் பாகிஸ்தானை சர்வதேச அமைப்புகள் குறிப்பிடுவது காரணமில்லாமல் அல்ல. 
சர்வதேச சமூகத்தின் கவனத்தை முக்கியமான மனித உரிமைப் பிரச்னைகளிலிருந்து திசைதிருப்பும் நோக்கில் சொந்த மக்களுக்கு எதிரான அத்துமீறல்களிலும் பாகிஸ்தான் ஈடுபடுகிறது. 
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட உள்விவகாரங்கள் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) கருத்துத் தெரிவிக்கத் தேவையில்லை. 
பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக, இந்திய யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைத்துவிட்டது 
என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT