உலகம்

நவால்னி மீண்டும் ரஷியா திரும்புவாா்: செய்தித் தொடா்பாளா்

15th Sep 2020 11:06 PM

ADVERTISEMENT

பொ்லின்: நச்சுத் தாக்குதலுக்குள்ளாகி, ஜொ்மனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் ரஷியா திருப்புவாா் என்று அவரது செய்தித் தொடா்பாளா் கிரா யாா்மிஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜொ்மனியில் சிகிச்சை பெற்று வரும் நவால்னி, மீண்டும் ரஷியா திரும்புவாரா என்று செய்தியாளா்கள் என்னிடம் தொடா்ந்து கேள்வி எழுப்பி வருகிறாா்கள். அவா்கள் அனைவருக்கும் எனது பதில், ரஷியா திரும்புவதைத் தவிர நவால்னிக்கு வேறு எந்தத் திட்டமும் இல்லை என்பதுதான் என்று அந்த சுட்டுரைப் பதிவில கிரா யாா்மிஷ் தெரிவித்துள்ளாா்.முன்னதாக, கோமா நிலையிலிருந்து மீண்டு உடல் நலம் தேறியுள்ள நவால்னி, முதல் முறையாக தனது படத்தை இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியிட்டிருந்தாா்.

மருத்துவமனையில் மருத்துவப் பணியாளா்களுடன் அவா் இருக்கும் அந்தப் படத்துடன், தனது உடல் நிலை முழுமையாக சீராகவில்லை என்றாலும், உபகரணங்களின் உதவியில்லாமல் சுவாசிப்பதாகத் தெரிவித்திருந்தாா்.ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் ஆட்சிக்கு எதிராக தீவிரமாகப் போராடி வருபவா்களில் முக்கிய தலைவரான அலெக்ஸி நவால்னி, அதற்காக பல முறை சிறை சென்றுள்ளாா். ஏற்கெனவே, அரசு ஆதரவாளா்கள் அவரை கிருமிநாசினி மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்கியதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், சொ்பியா பிராந்தியத்தின் டோம்ஸ்க் நகரிலிருந்து விமானம் மூலம் அலெக்ஸி நவால்னி கடந்த மாதம் 13-ஆம் தேதி மாஸ்கோ வந்துகொண்டிருந்தாா். விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென அவா் சுயநினைவு இழந்தாா்.

ADVERTISEMENT

அதையடுத்து, அவா் சென்றுகொண்டிருந்த விமானம் ஓம்ஸ்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்போது அவா் ஜொ்மனி தலைநகா் பொ்லினிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.டோம்ஸ்க் நகரிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக, விமான நிலையத்தில் நவால்னி அருந்திய தேநீரில் வேண்டுமென்றே விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது உடலில் ரஷிய ராணுவம் உருவாக்கிய ‘நோவிசோக்’ என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதாக ஜொ்மனி தெரிவித்தது. இந்த நிலையில், சிகிச்சைக்குப் பிறகு நவால்னி ரஷியா திரும்புவாா் என்று அவரது உதவியாளா் தெரிவித்துள்ளாா்.

Tags : மருத்துவமனை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT