உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சியின் பிரசார காணொலியில் மோடி

10th Sep 2020 02:46 AM

ADVERTISEMENT

 

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஆளும் குடியரசுக் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் பிரசார காணொலியில் மோடி - டிரம்ப் சந்திப்புக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் தற்போது அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப், துணை அதிபராக இருக்கும் மைக் பென்ஸ் ஆகியோர் மீண்டும் அப்பதவிகளுக்குப் போட்டியிடுகின்றனர். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் முறையே அதிபர், துணை அதிபர் பதவிகளுக்குப் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் குடியரசுக் கட்சி வெளியிட்டுள்ள மேலும் 4 ஆண்டுகள் என்ற தலைப்பிலான 107 விநாடிகள் ஓடக்கூடிய ஒரு பிரசார காணொலி, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை வெகுவாக கவர்ந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த காணொலியில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தபோது, ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் "மோடி நலமா?' (ஹெளடி மோடி) என்ற பெயரில் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஆமதாபாதில் வணக்கம் டிரம்ப் (நமஸ்தே டிரம்ப்) என்ற பெயரில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் கைகோத்தபடி ஹூஸ்டன் என்.ஆர்.ஜி. மைதானத்தில் நடந்து வரும் காட்சியுடன் தொடங்கும் இந்த காணொலியின் பின்னணியில், இவருக்கு அறிமுகம் தேவையில்லை. எந்தவொரு உரையாடலின்போதும் இவரது பெயர் உச்சரிக்கப்படுகிறது. அவர்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்று பிரதமர் மோடி பேசுவதும் இடம் பெற்றுள்ளது.
மேலும், இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது, மதிக்கிறது. அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு உண்மையான, விசுவாசமான நண்பனாக இருக்கும் என்று இந்த காணொலி நிறைவடைகிறது.
இந்த காணொலி சுட்டுரையில் 3 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல் முகநூல், கட்செவி அஞ்சல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலம் பகிரப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். 
அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் விதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 
குறிப்பாக மிச்சிகன், பென்சில்வேனியா, ஓஹியோ மாநிலங்களில் இரு கட்சியினருக்கும சமபலம் இருக்கும் நிலையில், அங்கு வாழும் இந்தியர்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT