உலகம்

சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது: வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை

1st Sep 2020 06:42 AM

ADVERTISEMENT


புது தில்லி / பாரிஸ்: சீனாவின் உள் விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என அந் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி எச்சரிக்கை விடுத்தார்.

கரோனா நோய்த்தொற்றுத் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக வாங் யி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை அவர் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது, உய்குர் முஸ்லிம்களின் மீதான அடக்குமுறை குறித்தும், ஹாங்காங் நிலவரம் குறித்தும் கவலை தெரிவித்த மேக்ரான், இது தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை சீனா மதிக்க வேண்டும் என வாங் யியிடம் வலியுறுத்தியதாக அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக பாரிஸில் செய்தியாளர்களிடம் வாங் யி கூறியதாவது: பயங்கரவாதத்தை அவர்களது மனது ஆக்கிரமித்திருந்தபோதும், ஜின்ஜியாங் முகாமில் பயிற்சி பெற்ற அனைவரது உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன. அந்தப் பயிற்சி முகாம்களில் இப்போது ஒருவரும் இல்லை. அவர்கள் பட்டம்பெற்று வேலைவாய்ப்பு பெற்று சென்றுவிட்டனர்.

ADVERTISEMENT

ஹாங்காங்கைப் பொருத்தவரை, தேசப் பாதுகாப்புக்காகவே புதிய சட்டம் இயற்றப்பட்டது. இவை இரண்டும் சீனாவின் உள் விவகாரங்கள் ஆகும். இதில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்றார்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் வசித்து வரும் உய்குர் முஸ்லிம்கள் தங்கள் தனி கலாசாரம், மொழி, மதம் காரணமாக பிரிவினைவாத எண்ணம் கொண்டுள்ளனர் என சீனா சந்தேகிக்கிறது.

எனவே, 10 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்களை முகாம்களில் அடைத்துவைத்து, அவர்களை உடல்ரீதியாகத் தாக்குவதாகவும், தங்கள் மத, மொழி அடையாளங்களைக் கைவிட வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல, ஹாங்காங்கில் ஜனநாயக உரிமையை வலியுறுத்தி போராடுபவர்களை அடக்குவதற்காக, புதிய சட்டத்தை சீனா அண்மையில் இயற்றியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT