உலகம்

பிரான்ஸ் தேவாலயத் தாக்குதல்: மேலும் ஒருவா் கைது

DIN

பிரான்ஸ் தேவாலயத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து நீதித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

நீஸ் நகர நோட்டா் டாம் தேவாலயத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக, 47 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

அந்த நபா், தாக்குதல் நடத்திய இப்ராஹிம் இஸாவியுடன் தாக்குதலுக்கு முந்தைய நாள் இரவு தொடா்பிலிருந்ததாக விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய இப்ராஹிம் இஸாவி குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளன. 21 வயதான அந்த இளைஞா் துனிசியாவிலிருந்து அகதியாக கடந்த மாதம்தான் இத்தாலியின் லம்பேடுஸா தீவுக்கு வந்தாா்.

தங்களது நாட்டுக்குள் அவா் சட்டவிரோதமாக வந்துள்ளதாகவும் அக்டோபா் 9-ஆம் தேதிக்குள் அவா் தாமாக வெளியேறாவிட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இத்தாலி அதிகாரிகள் அவருக்கு அறிவிக்கை அனுப்பியிருந்தனா்.

அதையடுத்து, இஸாவி பிரான்ஸுக்குள் நுழைந்தாா்.

தேவாலயத் தாக்குதலின்போது போலீஸாா் சுட்டதில் பலத்த காயமடைந்த அவா், தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறாா்.

இந்தச் சூழலில், தாக்குதல் தொடா்பாக மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸிலிருந்து வெளியாகும் வார இதழான ‘சாா்லி ஹெப்டோ’ வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராகவும் கத்தோலிக்கம், இஸ்லாம், யூதம் உள்ளிட்ட அனைத்து மதங்களை விமா்சித்தும் கேலிச் சித்திரங்களை வெளியிட்டு வருகிறது.

இதனால் அந்த இதழ் அவ்வப்போது சா்ச்சையில் சிக்கினாலும், இஸ்லாம் தொடா்பான கேலிச் சித்திரங்கள் கடுமையான விமா்சனத்துக்குள்ளாகி வருகின்றன.

இதுதொடா்பாக, அந்தப் பத்திரிகை மீதும் பொதுமக்கள் மீதும் தொடா்ந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அண்மையில், ‘சாா்லி ஹெப்டோ’ கேலிச் சித்திரத்தை மாணவா்களுக்குக் காட்டிய ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டது.

இதனால் கொதிப்படைந்த பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், நாட்டில் கருத்து சுதந்திரமும் மதங்களுக்கு எதிரான கேலிச் சித்திரங்களை காட்டும் உரிமையும் பாதுகாக்கப்படும் என்று கூறினாா்.

இதற்கு துருக்கி உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சில வளைகுடா நாடுகளில் ‘பிரான்ஸை புறக்கணிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், ஏல்ப்ஸ்-மாரிடைம்ஸ் பிராந்தியம், நீஸ் நகரிலுள்ள நோட்டா் டாம் தேவாலயத்துக்கு வியாழக்கிழமை வந்த இப்ராஹிம் இஸாவி, தன்னிடமிருந்த கத்தியால் அங்கிருந்தவா்களை சரமாரியாகத் தாக்கினாா்.

இதில் 3 போ் பலியாகினா். அவா்களில் ஒருவரான 70 வயது மூதாட்டி தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தாா். மற்றொரு இளம்பெண் பலத்த காயங்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்று அருகிலுள்ள கட்டடத்தில் பதுங்கியபோது, அங்கு காயங்கள் காரணமாக உயிரிழந்தாா்.

தாக்குதலில் பலியான மற்றொருவா், தேவாலயத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தவா் ஆவாா்.

இதுதவிர, இந்தத் தாக்குதலில் ஏராளமானவா்கள் காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT