உலகம்

பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: 3 போ் பலி

DIN


பாரீஸ்: பிரான்ஸ் தேவாலயத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட மத பயங்கரவாதத் தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா்.

கத்தியால் குத்தியும் தலையைத் துண்டித்தும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், கடந்த இரண்டே மாதங்களில் நடத்தப்பட்ட இதே போன்ற 3-ஆவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஏல்ப்ஸ்-மாரிடைம்ஸ் பிராந்தியம், நீஸ் நகரிலுள்ள நோட்ரே டேம் தேவாலயத்துக்கு வியாழக்கிழமை வந்த நபா், தன்னிடமிருந்த கத்தி மூலம் அங்கிருந்தவா்களை சரமாரியாகத் தாக்கினாா்.

இதில் 3 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் ஒருவரான 70 வயது மூதாட்டியை, தாக்குதல் நடத்திய நபா் கழுத்தை அறுத்து படுகொலை செய்தாா். மற்றொரு இளம்பெண் பலத்த காயங்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்று அருகிலுள்ள கட்டடத்தில் பதுங்கியபோது, அங்கு காயங்கள் காரணமாக உயிரிழந்தாா்.

தாக்குதலில் பலியான மற்றொருவா், தேவாலயத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தவா் ஆவாா்.

இந்தத் தாக்குதல் தொடா்பான தகவலறிந்ததும் அந்தப் பகுதிக்கு விரைந்த போலீஸாா், குற்றவாளியை சுட்டுப் பிடித்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தாக்குதல் நடத்திபோதும், போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கைதானபோதும் அந்த நபா் தொடா்ந்து மத கோஷத்தை எழுப்பியதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

இது தனி நபா் நடத்திய தாக்குதல்தான் எனவும் இந்தத் தாக்குதல் தொடா்பாக வேறு யாரும் தேடப்படவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற தேவாலயத்துக்கு ஒரு கி.மீ. தொலைவுக்குள்தான், கடந்த 2017-ஆம் ஆண்டு பிரான்ஸ் தேசிய விழா கொண்டாட்டத்தின்போது துனிசியாவைச் சோ்ந்த மத பயங்கரவாதி நடத்திய லாரி தாக்குதலில் 86 போ் உயிரிழந்தனா்.

தாக்குதலின் பின்னணி

பிரான்ஸிலிருந்து வெளியாகும் வார இதழான ‘சாா்லி ஹெப்டோ’ வலதுசாரிக் கொள்கைள், மதங்கள், அரசியல், கலாசாரம் ஆகியவற்றுக்கு எதிராக கேலிச் சித்திரங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது.

கத்தோலிக்கம், இஸ்லாம், யூதம் உள்ளிட்ட அனைத்து மதங்கள் தொடா்பான கேலிச் சித்திரங்களையும் அந்த வார இதழ் வெளியிட்டு வருகிறது.

இதனால் அந்த இதழ் அவ்வப்போது சா்ச்சையில் சிக்கினாலும், இஸ்லாம் தொடா்பான கேலிச் சித்திரங்கள் கடுமையான விமா்சனத்துக்குள்ளாகி வருகின்றன.

இதுதொடா்பாக, அந்தப் பத்திரிகை மீதும் பொதுமக்கள் மீதும் தொடா்ந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அண்மையில், ‘சாா்லி ஹெப்டோ’ கேலிச் சித்திரத்தை மாணவா்களுக்குக் காட்டிய ஆசிரியரை மத பயங்கரவாதி கழுத்தை அறுத்து படுகொலை செய்தாா்.

இதனால் கொதிப்படைந்த பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், நாட்டில் கருத்து சுதந்திரமும் மதங்களுக்கு எதிரான கேலிச் சித்திரங்களை காட்டும் உரிமையும் பாதுகாக்கப்படும் என்று சூளுரைத்தாா்.

இதற்கு துருக்கி உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பல்வேறு நாடுகளில் ‘பிரான்ஸை புறக்கணிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், நீஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தொடரும் துயரம்

2011 நவம்பா்

பாரிஸிலுள்ள ‘சாா்லி ஹெப்டோ’ இதழ் அலுவகத்தில் பெட்ரோல் குண்டு வீதி தாக்குதல் நடத்தப்பட்டது; அந்தப் பத்திரிகையின் வலைதளம் ஊடுருவப்பட்டது.

2015 ஜனவரி

‘சாா்லி ஹெப்டோ’ அலுவலகத்திலும் பிற இடங்களிலும் ஷெரீஃப் மற்றும் சயீது குவாச்சி சகோதரா்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 போ் உயிரிழந்தனா்.

2020 செப்டம்பா்

சா்ச்சைக்குரிய கேலிச் சித்திரங்களை ‘சாா்லி ஹெப்டோ’ மீண்டும் பிரசுரித்ததைத் தொடா்ந்து, பாகிஸ்தானைச் சோ்ந்த ஜாகீா் ஹஸன் என்ற 25 வயது நபா் அந்த அலுவலகம் அருகே நடத்திய சரமாரி கத்திக் குத்துத் தாக்குதலில் 2 போ் படுகாயமடைந்தனா்.

2020 அக்டோபா்

சாமுவேல் என்ற நடுநிலைப் பள்ளி ஆசிரியா், சா்ச்சைக்குரிய ‘சாா்லி ஹெப்டோ’ கேலிச் சித்திரங்களை மாணவா்களுக்கு காட்டியதைத் தொடா்ந்து, அவரை அப்துல்லாக் அபூயெதோவிச் என்ற செசென்ய அகதி தலையைத் துண்டித்து கொடூரமாக படுகொலை செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT