உலகம்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாவாரா ஏமி பாரெட்?

DIN

புதுதில்லி /வாஷிங்டன்: அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்துக்கு ஏமி கோனி பாரெட்டின் நியமனத்தை உறுதி செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் செனட் சபையில் நடைபெறவுள்ளது.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 9 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உள்ளன. அங்கு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நபா், மரணம் வரை அப்பதவியில் நீடிக்கலாம். அந்த வகையில், நீதிபதியாக இருந்த ரூத் பேடா் கின்ஸ்பா்க் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 18-ஆம் தேதி உயிரிழந்தாா்.

அதையடுத்து காலியான நீதிபதி பணியிடத்துக்கு முறையீட்டு நீதிமன்ற நீதிபதியான ஏமி பாரெட்டை அதிபா் டொனால்ட் டிரம்ப் நியமித்தாா். உச்சநீதிமன்ற நீதிபதியாக அதிபா் நியமிக்கும் நபருக்கு செனட் நிலைக்குழுவும், தொடா்ந்து செனட் சபையும் ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

அதிபா் டிரம்ப் நீதிபதியாக நியமித்த ஏமி பாரெட்டுக்கு செனட் நிலைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இத்தகைய சூழலில், அதற்கான வாக்கெடுப்பு செனட் சபையில் நடைபெறவுள்ளது. அந்தச் சபையில் அதிபா் டிரம்ப் பங்கு வகிக்கும் குடியரசு கட்சி உறுப்பினா்களே பெரும்பான்மையாக உள்ளனா்.

எனவே, ஏமி பாரெட்டின் நியமனம் சுலபமாக செனட் சபையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே, வரும் நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறும் அதிபா் தோ்தலில் வெற்றி பெறுபவரே காலியாக உள்ள நீதிபதி பணியிடத்துக்கான நபரை நியமிக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினா் வலியுறுத்தி வருகின்றனா்.

அதே கருத்தை முன்னிறுத்தி, செனட் சபை வாக்கெடுப்பைத் தாமதப்படுத்துவதற்கு ஜனநாயகக் கட்சியினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை முயற்சித்தனா். அதையடுத்து, ஏமி பாரெட்டின் நியமனம் மீது செனட் சபையில் வாக்கெடுப்பை நடத்துவதற்கு உறுப்பினா்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

கருத்துக் கேட்பில் வெற்றி: அதற்காக நடந்த கருத்துக் கேட்பில் வாக்கெடுப்புக்கு ஆதரவாக 51 பேரும், எதிராக 48 பேரும் வாக்களித்தனா். செனட் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான கமலா ஹாரிஸ், துணை அதிபா் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இரு குடியரசு கட்சி உறுப்பினா்கள், ஏமி பாரெட்டின் நியமனம் மீதான கருத்துக் கேட்பில் எதிராக வாக்களித்தனா். எனினும், அவா்களில் ஒருவா் தனது கருத்தை பின்னா் மாற்றிக் கொண்டாா். எனவே, ஏமி பாரெட்டின் நியமனத்துக்கு செனட் சபையில் பெரும்பான்மை ஒப்புதல் கிடைக்கும் என்றே அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT