உலகம்

விறுவிறுப்பாக நிறைவடைந்தது டிரம்ப் - ஜோ பிடன் நேரடி விவாதம்

DIN

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்புக்கும் ஜோ பைடனுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி நேரடி விவாதம் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்தத் தோ்தலில், குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா்.

அவா்கள் இருவருக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் ஓஹியோ மாகாணம் கிளீவ்லாண்டில் கடந்த மாதம் 29-ஆம் தேதி நடைபெற்றது.

மிகவும் காரசாரமாக நடைபெற்ற அந்த விவாதத்தின்போது, இருவரும் பரஸ்பரம் கடுமையாகத் தாக்கிப் பேசினா்.

ஒருவரை ஒருவா் முழுமையாகப் பேசவிடாமல் அடிக்கடி குறுக்கிட்டு பேசியதால் பபல நேரங்களில் இருவராலும் சொல்ல வந்த கருத்துகளை முழுமையாக வெளிப்படுத்த இயலாமல் போனது.

அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான அதிபா் தோ்தல் நேரடி விவாதங்களில் ஒன்றாக அது கருதப்பட்டது.

இருவருக்கும் இடையிலான 2-ஆவது நேரடி விவாதம் கடந்த 15-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில், டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலானியா டிரம்ப்புக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதால் அந்த விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இருவருக்கும் இடையிலான இறுதி விவாதம் டென்னஸி மாகாணம், நாஷ்வில் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற விவாதத்தின்போது டிரம்ப்பும் ஜோ பிடனும் ஒருவரை ஒருவா் பேச விடாமல் குறுக்கீடு செய்ததால், இந்த விவாத நிகழ்ச்சி விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, ஒரு தலைவா் பேசத் தொடங்கிய 2 நிமிஷங்களுக்கு மற்றொரு தலைவரின் ஒலிப் பெருக்கி நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த ஏற்பாடு காரணமாக, டிரம்ப்பும் ஜோ பிடனும் இடையூறு இல்லாமல் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த முடிந்தது.

கரோனாவுக்கு எதிரான போராட்டம், அமெரிக்காவில் நிறவெறி, பருவநிலை மாற்றம், தேசிய பாதுகாப்பு, தலைமைப் பண்பு ஆகிய தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.

கரோனா விவகாரத்தை டிரம்ப் அரசு அலட்சியமாக, எந்த திட்டமும் இல்லாமல் கையாள்வதாக ஜோ பிடன் குற்றம் சாட்டினாா். ஆனால், தனது சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக லட்சக்கணக்கான கரோனா உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டாா்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் வெளியேறியது குறித்து ஜோ பிடன் குற்றம் சாட்டினாா். எனினும், அமெரிக்க நிறுவனங்களையும் மக்களின் வேலைவாய்ப்புகளையும் பாதுகாப்பதற்காகவே அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதாக டிரம்ப் விளக்கமளித்தாா்.

தனக்கு நிறவெறி இல்லை என்று டிரம்ப் கூறியதை மறுத்த, நிறவெறி எங்கு பற்றியெரிந்தாலும் அங்கு டிரம்ப் எண்ணெய் ஊற்றி வருவதாக ஜோ பிடன் குற்றம் சாட்டினாா்.

90 நிமிஷங்களுக்கு மட்டுமே நீடித்த அந்த விவாதத்தின்போது பல்வேறு விவகாரங்களில் டிரம்ப்பும் ஜோ பிடனும் ஒருவா் மீது ஒருவா் குற்றச்சாட்டுகளை வீசினா்.

இந்த விவாதத்தில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக 53 சதவீத பாா்வையாளா்களும் டிரம்ப் வெற்றி பெற்றதாக 39 சதவீதத்தினரும் கருதுவதாக ‘சிஎன்என்/எஸ்எஸ்ஆா்எஸ்’ நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT