உலகம்

கூகுள் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

DIN

இணையத்தில் தேடலின்போது தகவல்களை அளிப்பதிலும், விளம்பரங்களை வெளியிடுவதிலும் தொழில் போட்டி விதிகளை மீறி செயல்பட்டதாக கூகுள் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு நீதித்துறை செவ்வாய்க்கிழமை வழக்கு தொடுத்தது.

போட்டிகளை ஒடுக்கி, லாபம் ஈட்டுவதற்காக இணையத்தில் தேடலின்போது தகவல் தரும் பணிகளிலும், விளம்பரங்களை வெளியிடுவதிலும் தொழில்போட்டி விதிகளை மீறி கூகுள் நிறுவனம் செயல்படுவதாக அமெரிக்க எம்.பி.க்களும், நுகா்வோா் வழக்குரைஞா்களும் நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

இந்த புகாா்கள் தொடா்பாக அந்த நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒழுங்காற்று அமைப்புகள் அவ்வப்போது விதித்த பல லட்சம் கோடி ரூபாய் அபராதம் போதுமானது அல்ல எனவும், அந்த நிறுவனத்தின் மீது அந்த அமைப்புகள் மேற்கொண்ட சட்டபூா்வ நடவடிக்கைகள் கடுமையாக இல்லை என்றும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் மாற்றத்தை கொண்டுவர, அதன் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள உயா்நீதிமன்றத்தில் அந்நாட்டு நீதித்துறை செவ்வாய்க்கிழமை வழக்கு தொடுத்தது. அதன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘இணையத்தில் தகவல்களை தேடும்போது கூகுளை மட்டுமே வாடிக்கையாளா்கள் பயன்படுத்தும் விதத்தில் செல்லிடப்பேசி அமைப்புகள் இருப்பதை உறுதி செய்ய செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு கூகுள் நிறுவனம் பல லட்சம் கோடி வழங்குகிறது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் தொழில் போட்டி விதிகளை மீறுவதாக அமெரிக்க நாடாளுமன்ற சட்டத்துறை துணைக்குழுவின் ஓராண்டு விசாரணைக்குப் பிறகு தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் அரசு துணை அட்டா்னி ஜெனரல் ஜெஃப் ரோசன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இணையத்தின் நுழைவாயிலாக கூகுள் திகழ்கிறது. போட்டியாளா்களின் வாய்ப்புகளை சேதப்படுத்தும் தவறான நடவடிக்கைகள் மூலம் தனது ஏகபோக உரிமையை அந்த நிறுவனம் தக்கவைத்து வருகிறது.

தொழில்நுட்பத் துறையில் தொழில் போட்டி விதிகளை மீறுவது தொடா்பான வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் புதிய கண்டுபிடிப்புகளில் நாம் அடுத்தகட்ட வளா்ச்சியை இழக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக கூகுள் நிறுவனம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க நீதித்துறை தொடுத்துள்ள வழக்கு முற்றிலும் தவறானது. கட்டாயத்தின்பேரிலோ, வேறு தேடுபொறிகளை கண்டடைய முடியாமலோ மக்கள் கூகுளை பயன்படுத்தவில்லை. விருப்பத்தின்பேரில் தான் அவா்கள் பயன்படுத்துகின்றனா்’ என்று தெரிவித்தது.

கடந்த 1998-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கூகுள் நிறுவனம், தனது சேவைகளை விரிவுபடுத்த தொடங்கியது முதலே அதற்கு கடிவாளமிடும் விவாதங்கள் எழுந்தன.

உலகின் மிகப் பெரிய தேடுபொறியான ‘க்ரோம்’, உலகின் பெரும்பான்மையான ஸ்மாா்ட்ஃபோன்களை செலுத்தும் ‘ஆன்டிராய்டு’ இயங்குதளம், யூ-டியூப், மிகப் பிரபலமான வரைபட தளம் ஆகியவை கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. ஆனால் அந்த சேவைகளைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விளம்பரங்கள் மூலம் கூகுள் வருவாய் ஈட்டுகிறது.

ஏற்கெனவே தொழில் போட்டி விதிகளை மீறி செயல்பட்டதாக ஆப்பிள், அமேசான், முகநூல் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக அந்நாட்டின் நீதித்துறை மற்றும் மத்திய வா்த்தக ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது கடுமையான நடவடிக்கையின் தொடக்கமாக பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT