உலகம்

அமெரிக்க அதிபா் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதி

3rd Oct 2020 03:00 PM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிரம்ப்பின் பிரத்யேக மருத்துவா் ஷான் கோன்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், மருந்து தயாரிப்பு நிறுவனமான ரெஜெனெரோன் தயாரித்து, இதுவரை உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தால் கரோனா நோய்க்கான சிகிச்சைக்கு பயன்படுத்த அங்கீகாரம் பெறாத, தற்போது சோதனையில் இருக்கும் மருந்தை டிரம்ப்புக்கு அளித்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், டிரம்ப் வெளியிட்ட விடியோ ஒன்றில், நான் தற்போது வால்டர் ரீட் மருத்துவமனைக்குச் செல்கிறேன். நான் நன்றாக இருப்பதாகவே நினைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்திக் கொண்டே, டொனால்ட் டிரம்ப், தனது அலுவல் பணிகளை மேற்கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில், அவரது மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் அளித்த ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் அவரது மனைவிக்கும் நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தனது சுட்டுரை பக்கத்தில் அவா் வெளியிட்டிருந்த பதிவில், மெலானியா டிரம்ப்புக்கும், எனக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. நாங்கள் இருவரும் உடனடியாக வெள்ளை மாளிகையில் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். நோய்த்தொற்றிலிருந்து குணமடைவதற்கான வழிமுறைகளை உடனடியாகத் தொடங்கியுள்ளோம். இருவரும் இணைந்து, விரைவில் இந்த நோய்த் தொற்றிலிருந்து மீள்வோம் என்று அந்த சுட்டுரைப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

கரோனா தொற்று உறுதியானதையடுத்து, வெள்ளை மாளிகைக்கு வெளியே டிரம்ப் பங்கேற்பதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT