உலகம்

35 ஆண்டு கனவு நனவானது; காவனின் கூண்டு காலியானது

DIN


பாகிஸ்தானின் உயிரியல் பூங்காவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காவன் யானையின் கூண்டு வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆனால் அதைப் பார்க்கும் போது பலரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

ஏனென்றால், அதுவே காவனின் 35 ஆண்டு கால கனவு. தனிமையில் வாடிய காவனின் அந்த கனவு பல விலங்குகள் நல அமைப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின்  கனவாக மாறி, இன்று நனவாகிவிட்டது.

உலகிலேயே மிக அதிக காலம் தனிமையில் வாடிய யானையாக அடையாளம் காணப்பட்ட காவன், நேற்று பாகிஸ்தானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கம்போடியா பறந்தது.

அதற்காக ஒரு வார காலத்துக்கும் மேலாக, அது சிறைவைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு அருகே ஒரு சிறப்பு உலோகக் கூண்டு தயாரிக்கப்பட்டு, அதில் அவ்வப்போது காவன் சென்று தங்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளர்களுக்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் காவன் அவர்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தது. அந்த கூண்டில் இருந்தபடிதான் தனது சுதந்திர வாழ்வைத் தொடர காவன் விமானத்தில் பறந்தது.

இந்திய நேரப்படி நேற்று மாலை பாகிஸ்தான் உயிரியல் பூங்காவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கம்போடியாவுக்கு காவன் புறப்பட்டது. கம்போடியா நாட்டில் திங்கள்கிழமை தரையிறங்கும் காவன் யானையை வரவேற்க தயாராக இருப்பதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நேத் பீக்த்ரா தெரிவித்துள்ளார்.

கம்போடியாவில் இருக்கும் உயிரியல் பூங்காவில் ஏற்கனவே மூன்று பெண் யானைகள் இருப்பதால், நிச்சயம் காவனின் வாழ்வில் தனிமை என்பது விரட்டப்படும் என்றே அனைவரின் எதிர்பார்ப்புமாக உள்ளது.

பாகிஸ்தானில் இருந்த ஒரே ஆசிய யானை காவன் என்பதால், அது தனது வாழ்நாளின் பல ஆண்டுகளை தனிமையிலேயே கழிக்கும் நிலை ஏற்பட்டது.

ஃபோர் பாஸ் என்ற விலங்குகள் நல அமைப்பு மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விலங்குகள் நலக் குழுக்கள் என பலவும் இணைந்து, காவனை பாகிஸ்தானில் இருந்து வெளியே அனுப்ப பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன. அதனை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்வதாக இருந்தால், பயணத்தின் போது அதற்கு உணவளிப்பது பெரும் சவாலாக இருந்தது. பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு காவன் நேற்று விமானத்தில் புறப்பட்டது.

உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு பிரியாவிடை கொடுத்து தனது புதிய வாழ்வைத் தொடங்கி புத்துணர்ச்சியோடு புறப்பட்டுள்ளது.

காவன் மீட்புப் பணிகளில் நட்சத்திரமாக விளங்கிய பாடகி செர், கம்போடியாவில் நடைபெறும் காவன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

SCROLL FOR NEXT