உலகம்

எத்தியோப்பியா: தாக்குதலுக்குப் பயந்து டிக்ரே தலைநகரிலிருந்து வெளியேறும் மக்கள்

28th Nov 2020 08:11 AM

ADVERTISEMENT


நைரோபி: கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் டிக்ரே மாகாணத் தலைநகரான மிகேலியில் தாக்குதலுக்குப் பயந்து, அந்த நகரிலிருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

டிக்ரே பிராந்தியத்தில், மிகப்பெரிய ஆயுத பலம் கொண்ட டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்), எத்தியோப்பிய அரசில் மிகுந்த செல்வாக்கு பெற்றதாக இருந்தது.

இந்நிலையில், கடந்த 2018இல் பிரதமராக அபை அகமது பதவியேற்ற பிறகு, டிபிஎல்எப் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முற்றியது. டிபிஎல்எப் தலைமையிலான டிக்ரே அரசை சட்டவிரோதமானது என்று அபை அகமதுவும், அவரது தலைமையிலான எத்தியோப்பிய அரசை சட்டவிரோதமானது என்று டிபிஎல்எப்பும் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த சூழலில் டிக்ரேவில் உள்ள தங்கள் ராணுவ முகாம் மீது டிபிஎல்எப் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய அபை அகமது, அந்த மாகாண அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டதாக கடந்த 4 ஆம் தேதி அறிவித்தார்.

ADVERTISEMENT

இரு தரப்புக்கும் இடையே சண்டை தொடர்ந்து வரும் நிலையில், டிக்ரே மாகாணப் படையினருக்கு எதிராக இறுதிக் கட்டத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தார் பிரதமர் அபை அகமது. இதில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, மிகேலி நகருக்கு வெளியே இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடத்ததாகக் கூறப்படுகிறது.

டிக்ரே பிராந்தியத்தில் சுமார் 6 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். சண்டை தொடர்வதால், இப்பகுதியில் உணவுப்பொருள்கள் உள்பட அத்தியாவசியப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், தாக்குதலுக்குப் பயந்தும் மிகேலி நகரிலிருந்து  மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், மிகேலியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, நாட்டின் சமாதான அமைச்சகத்தின் கீழ் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எத்தியோப்பிய அரசு உறுதி கூறியுள்ளது.

டிக்ரே மாகாணத்தில் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, சர்வதேச சமூகத்தின் தலையீடு தேவையில்லை என்று ஏற்கெனவே அறிவித்துள்ளார் அபை அகமது. அதே நேரத்தில், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உயர்நிலைத் தூதர்கள் தன்னை சந்தித்துப் பேசலாம் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT