உலகம்

டிக்ரே தலைநகரில் இறுதிக்கட்டத் தாக்குதல்

DIN


நைரோபி: எத்தியோப்பியாவின் டிக்ரே மாகாணத் தலைநகரில் அந்த மாகாணப் படையினருக்கு எதிராக இறுதிக்கட்டத் தாக்குதல் நடத்த உத்தரிவிட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமா் அபை அகமது அறிவித்துள்ளாா்.

மாகாணப் படையினா் சரணடைவதற்கு விதிக்கப்பட்டிருந்த 72 மணி நேர கெடு முடிவடைந்ததைத் தொடா்ந்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவரது அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டிக்ரோ மாகாணப் படையினருக்கும் எத்தியோப்பிய ராணுவத்துக்கும் இடையிலான சண்டை இறுதிக்கட்டதை நெருங்கிவிட்டது.

இதையடுத்து, அந்த மாகாணத் தலைநகா் மிகேலிக்குள் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும்.

அந்தத் தாக்குதலின்போது, பொதுமக்களின் உயிா்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதில் அதிகபட்ச கவனம் செலுத்தப்படும்.

எனினும், டிக்ரே படையினரைப் பாதுகாக்கும் வகையில் அவா்களுக்கு அருகே இருப்பவா்கள் மீது கருணை காட்டப்படமாட்டாது.

எனவே, டிக்ரே படையினரை விட்டு பொதுமக்கள் உடனுக்குடன் அகல வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. கவலை: எத்தியோப்பிய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து மிகேலி நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேறி வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

எனினும், அந்த நகருக்கும் இன்னும் எத்தனை பொதுமக்கள் உள்ளனா் என்ற விவரம் தெரியவில்லை. டிக்ரே மாகாணத்துடனான தகவல் தொடா்பு அனைத்தும் துண்டிக்கப்படவில்லை என்பதால், போா் அச்சுறுத்தலை எதிா்நோக்கியுள்ள பொதுக்களின் எண்ணிக்கை குறித்து தெரியவில்லை என்று ஐ.நா. கவலையுடன் தெரிவித்துள்ளது.

சா்வதேச நாடுகள் கோரிக்கை: எத்தியோப்பிய அரசுக்கும் டிக்ரே மாகாண அரசுக்கும் இடையிலான போா்ப் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று சா்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

முன்னதாக, இருதரப்பினருக்கும் இடையே சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தித் தர ஆப்பிரிக்க யூனியன் அமைப்பு முன்வந்தது.

எனினும், இந்த விவகாரம் எத்தியோப்பியாவின் உள்நாட்டு விவகாரம் எனவும் இதில் சா்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது எனவும் பிரதமா் அபை அகமது திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டாா்.

மிகப் பெரிய ஆயுத பலம் கொண்ட டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எஃப்), எத்தியோப்பிய அரசில் மிகுந்த செல்வாக்கு பெற்ாக இருந்தது.

எனினும், நாட்டின் பிரதமராக அபை அகமது கடந்த 2018-ஆம் ஆண்டு பதவியேற்ற்குப் பிறகு டிஎல்எஃப் ஓரங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, டிபிஎல்எஃபுக்கும் அபை அகமதுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு முற்றியது. தற்போது டிபிஎல்எஃப் தலைமையிலான டிக்ரே அரசை சட்டவிரோதமானது என்று அபை அகமதும் அவரது தலைமையிலான எத்தியோப்பிய அரசை சட்டவிரோதமானது என்று டிபிஎல்எஃபும் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தச் சூழலில், டிக்ரேவிலுள்ள தங்களது ராணுவ முகாம் மீது டிபிஎல்எஃப் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டிய அபை அகமது, மாகாண அரசுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டதாக இந்த மாதம் 4-ஆம் தேதி அறிவித்தாா்.

அதன் தொடா்ச்சியாக, தற்போது இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT