உலகம்

கடலின் ஆழத்தை அளவிடும் செயற்கைக்கோள்: விண்ணில் செலுத்தப்பட்டது

23rd Nov 2020 01:11 PM

ADVERTISEMENT

கடலின் ஆழத்தைத் துல்லியமாகக் கண்டறிவதற்காக அமெரிக்காவும்  ஐரோப்பாவும் இணைந்து உருவாக்கிய செயற்கைக்கோள் கலிபோர்னியாவிலிருந்து பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது.

பல ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்டு வந்த இந்த செயற்கைக்கோள் தற்போதுதான் ஏவப்பட்டுள்ளது. 

இந்த செயற்கைக்கோளை எடுத்துச் சென்ற ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட், வாண்டன்பெர்க் விண்வெளித் தளத்திலிருந்து சனிக்கிழமை காலை 9:17 மணிக்கு பசிபிக் பெருங்கடலின் தெற்கு நோக்கி செலுத்தப்பட்டது. இதில், பால்கனின் முதல் பகுதி மட்டும் மீண்டும் ஏவுதளத்திற்குத் திரும்பியது. 

விண்வெளி அடிப்படையிலான கடல்சார் புவியியலை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றிய நாசாவின் முன்னாள் அதிகாரியின் பெயர் சூட்டப்பட்ட  இந்த 'சென்டினல் -6 மைக்கேல் ப்ரெய்லிச் செயற்கைக்கோளில்' மிகவும் துல்லியமான ரேடார் அல்டிமீட்டர் உள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் கடலின் ஆழத்தைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். இதே வகையைச் சேர்ந்த மற்றொரு செயற்கைக்கோளான சென்டினல் - 6பி 2025 ஆம் ஆண்டில் ஏவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடல் தண்ணீர் சூடாவதன் மூலமும் குளிர்வதன் மூலமும் கடலின் ஆழத்தில் மாற்றம் ஏற்படுகிறது. விஞ்ஞானிகள் அல்டிமீட்டர் தரவுகளைப் பயன்படுத்தி எல் நினோ (வெப்பநிலை) மற்றும் லா நினா (குளிர்நிலை) போன்ற வானிலையைப் பாதிக்கும் நிலைகளைக் கண்டறிகின்றனர். மேலும், கடல் ஆழத்தில் மாற்றம் ஏற்படுவதால் கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால் இந்த அளவீடுகள் மிகவும் அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

சென்டினல் - 6 செயற்கைக்கோள் மூலம் துல்லியமான கடல் ஆழத்தை அளவிடுவதுடன், செயற்கைக்கோளில் உள்ள பிற கருவிகள் வளிமண்டல வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பற்றிய தரவுகளை வழங்கும். இது உலகளாவிய வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்த உதவும்.

இந்தத் திட்டத்துக்காக ஐரோப்பாவும், அமெரிக்காவும் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை (8,140 கோடி ரூபாய்) பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags : satellite
ADVERTISEMENT
ADVERTISEMENT