கரோனா வைரஸ் தடவப்பட்ட கடிதங்களிடமிருந்து கவனமாக இருக்குமாறு உலக நாட்டுத் தலைவர்களை பன்னாட்டு காவல்துறை அமைப்பான இன்டர்போல் எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு பல்வேறு தரப்பினரையும் பாதித்து வருகிறது. உலக தலைவர்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியா உள்பட 194 உறுப்பு நாடுகளில் உள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கான கரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை பன்னாட்டு காவல்துறை அமைப்பான இன்டர்போல் சமீபத்தில் வழங்கியது.
அதில் முக்கியத் தலைவர்களுக்கு கரோனா வைரஸ் தடவப்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து கவனமுடன் செயல்படவும் தெரிவித்துள்ளது. தலைவர்களின் அலுவலகப் பணியாளர்களை தொடர்ச்சியாக மருத்துவக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரவும், மருத்துவ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியமுடன் செயல்பட வேண்டாம் எனவும் இன்டர்போல் எச்சரித்துள்ளது.