உலகம்

அதிபர் தேர்தலுக்கு எதிராக மேலும் பல வழக்குகள்: டிரம்ப் அறிவிப்பு

17th Nov 2020 06:08 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் அசியலமைப்புச் சட்ட மீறல் தொடர்பாக மேலும் பல வழக்குகள் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாகவும், குடியரசுக் கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்ததாகவும் பிரதான ஊடகங்கள் கடந்த வாரம் கணித்து செய்தி வெளியிட்டன.

ஆனால், தோல்வியை ஏற்க மறுத்து வரும் டிரம்ப் சார்பாக, தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி பல்வேறு மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஊடகங்களும் அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவுகளில் டிரம்ப் கூறியுள்ளதாவது:
தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாகவும், அவர் ஜனவரி மாதம் அதிபர் பதவியை ஏற்பார் எனவும் போலி ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரத்தின்போது ஜோ பைடனுக்கு மட்டுமே இந்த ஊடகங்கள் ஆதரவு அளித்தன. இந்த ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்டு வருகின்றன. மற்றொரு தரப்புக்கு, அதாவது எங்கள் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க முன்வரவில்லை.

ADVERTISEMENT

இந்தத் தேர்தலில் அரசியலமைப்புச் சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இதை வெளிக்கொண்டு வர நாங்கள் தயாராகி வருகிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு நடத்தப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்ட மீறலை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்தத் தேர்தலில் நடந்த அரசியலமைப்புச் சட்ட மீறல் மற்றும் தேர்தல் முடிவு மாற்றத்துக்காக நடந்த முறைகேடுகள் தொடர்பாக பெரிய அளவில் மேலும் பல வழக்குகள் விரைவில் தாக்கல் செய்யப்படும். மோசடியான தேர்தல் மூலம் நாட்டை களவாட அனுமதிக்க மாட்டோம் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தேர்தலில் மோசடி நடந்ததால் ஜோ பைடன் வெற்றி பெற்றார் என்றும், ஆனால் இதை தான் ஏற்கவில்லை என்றும் இருவேறு சுட்டுரைப் பதிவுகளை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தார் டிரம்ப். இதையடுத்து தோல்வியை டிரம்ப் ஒப்புக்கொண்டுவிட்டதாகக் கருதப்படும் சூழலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் டிரம்ப்.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் மொத்தமுள்ள 538 மக்கள் பிரதிநிதி வாக்குகளில், சமீபத்திய வாக்கு எண்ணிக்கை முடிவின்படி ஜோ பைடனுக்கு 306 வாக்குகள் கிடைத்துள்ளன. டிரம்ப்புக்கு 232 வாக்குகள் கிடைத்துள்ளன. இதில் பென்சில்வேனியா, நெவாடா, மிச்சிகன், ஜார்ஜியா, அரிசோனா மாகாணங்களின் வாக்கு எண்ணிக்கைக்கு எதிராகவும், விஸ்கான்சின் மாகாணத்தில் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரியும் டிரம்ப் தரப்பினர் வழக்குகள் தொடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT