உலகம்

'350 கிராம் எடை; 9 அங்குல உயரம்' - பிறந்து 6 மாதங்களைக் கடந்தும் நலமாகவுள்ள குழந்தை

DIN

உலகின் மிகச் சிறிய, குறைப் பிரசவக் குழந்தை டயானா பெகேரோ.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் 22 வார கர்ப்ப காலத்திலேயே, மே 10, 2020 அன்னையர் தினத்தன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையான ஓர்லாண்டோ ஹெல்த் வின்னி பால்மர் மருத்துவமனையில் பிறந்தாள் டயானா. பெற்றோர் பெகேரோ - டாவரேஸ். 

பிறந்த நேரத்தில் 350 கிராம் (12 அவுன்ஸ்) எடை மற்றும் உடல் அளவு ஒன்பது அங்குலம் மட்டுமே கொண்டிருந்தாள் டயானா. குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் உயிர் பிழைத்திருக்க சாத்தியம் குறைவு. டயானா பிறந்தபோதும் மருத்துவர்கள் அவ்வாறே கூறினர். ஆனால், அதைத் தாண்டி டயானா வாழ்ந்துகொண்டிருக்கிறாள். 

பிறந்த வினாடி முதலே டயானா தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தாள். மருத்துவர்களின் முயற்சியால் தற்பொழுது 3 கிலோ எடை, 19 அங்குலம் உயரத்துடன் இருக்கிறாள்.

'பொதுவாக இம்மாதிரியான எடையில் பிறக்கும் குழந்தைகள் 3 நாள்களுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை. ஆனால், டயானா அதை முறியடித்து அடுத்த இலக்கான 2 வாரங்களையும் தாண்டி இன்று 6 மாதங்களைக் கடந்திருக்கிறாள்' என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

மே 10 ஆம் தேதி தாய் டாவரேஸுக்கு பிரசவ வலி வந்தது. சரியாக 9.09 மணிக்கு டயானா பிறந்தாள். குழந்தை வயிற்றில் இருந்த காலம் 22 வாரங்கள் 4 நாள்கள். பிறந்தபோது எடை 350 கிராம், 9 அங்குலம் உயரம். 

குழந்தை மிகவும் குறைந்த எடை கொண்டிருந்ததால், 22 வாரங்களிலேயே பிறந்துள்ளதாலும் குழந்தை உயிர் பிழைப்பது அரிது என்று மருத்துவர் தாயிஸ் க்யூலிஸ் கூறியுள்ளார். எனினும் டயானா போல பிறந்த பல குழந்தைகள் மருத்துவர்களின் முயற்சியால் இன்று வரை நலமாக, இயல்பாக வாழ்கின்றனர் என்றும் அவர் கூறினார். 

டயானா பிறந்து 7 நிமிடம் கழித்தே இதயம் துடிக்கத் தொடங்கியது. மிகவும் சிறிதாக இருந்த குழந்தையை கையில் தூக்க முடியாது. ஒரு மாதத்திற்கு பிறகே குழந்தையை கையில் கொடுத்துள்ளனர் மருத்துவர்கள். தொடர்ந்து 6 மாதம் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த டயானா மருத்துவமனையில் இருந்து விடுதலை பெற்றிருக்கிறாள். 

பெகேரோ - டாவரேஸ் தம்பதி,  6 மாதங்களுக்குப் பிறகு தங்கள் செல்ல மகளை கடந்த நவம்பர் 6 ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். நவம்பர் 5 ஆம் தேதி பெகேரோவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவர்கள் கூறும்போது, 'இது எங்களுக்கு மிகவும் கடினமான நாள்கள். என்ன நடக்கிறது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் மகள் பிழைப்பாரா இல்லையா என்பது கூட தெரியவில்லை. என் வாழ்க்கையில் மிகவும் கடினமான நாள்கள் இவை. இவ்வுலகத்திலேயே மிகவும் சிறிய குழந்தையாக அவள் இருந்தாள். அவள் இவ்வுலகில் உயிர் பிழைத்திருப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவளிடம் இருந்த விடாமுயற்சியை நாங்கள் கற்றுக்கொண்டோம்' என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினர். 

'எங்கள் மருத்துவமனையில் இது ஓர் இனிப்பான நாள். ஆனால், டயானா மருத்துவமனையை விட்டுச் செல்வது வருத்தமாகவே உள்ளது. ஏனென்றால் 6 மாதம் என்ற நீண்ட காலப் பயணத்தில் அவளும் அவளுடைய பெற்றோரும் எங்களுடன் பயணித்துள்ளனர். எனினும் இவ்வுலகத்தில் அவள் பல கட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறாள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது' என்று மருத்துவர் தாயிஸ் க்யூலிஸ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT