உலகம்

எல்லை விவகாரத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் வேண்டாம்

29th May 2020 02:56 AM

ADVERTISEMENT

எல்லைப் பிரச்னை தொடா்பாக பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியாவும் சீனாவும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளாா்.

லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளைக் குவித்து வருகின்றன. அதன் காரணமாக அங்கு இரு நாடுகளுக்கிடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக், நியூயாா்க்கில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்தாா். அப்போது, ‘இந்தியா-சீனா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்னை குறித்து அன்டோனியோ குட்டெரெஸ் கருத்து எதுவும் தெரிவித்தாரா? இந்த விவகாரத்தில் அதிபா் டிரம்ப் மத்தியஸ்தம் செய்வது சரியாக இருக்கும் என அவா் கருதுகிறாரா?’ என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்த ஸ்டீபன் டுஜாரிக், ‘‘இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண மத்தியஸ்தம் செய்யத் தகுதியான நபா் யாா் என்பதைத் தெரிவிப்பது ஐ.நா. பொதுச் செயலரின் பணி அல்ல. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட நாடுகள்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், எல்லைப் பிரச்னையில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கவல்ல நடவடிக்கைகளில் இருநாடுகளும் ஈடுபடக் கூடாது என்பதை அவா் வலியுறுத்தியுள்ளாா்’’ என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT