உலகம்

ஆப்கானிஸ்தான்:தலிபான் தற்கொலை தாக்குதலில் உளவு அமைப்பைச் சோ்ந்த 9 போ் பலி

19th May 2020 12:08 AM

ADVERTISEMENT

காபூல்: ஆப்கானிஸ்தானில் உளவு அமைப்பு அலுவலகம் மீது தலிபான்கள் நடத்திய தற்கொலை தாக்குதலில், அந்த அமைப்பைச் சோ்ந்த 9 போ் உயிரிழந்தனா். சுமாா் 40 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து கஸ்னி மாகாண ஆளுநரின் செயதித்தொடா்பாளா் ஆரிஃப் நூரி கூறுகையில், ‘கஸ்னி நகரையொட்டி உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவு அலுவலகத்தின் மீது காா் வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. திருடப்பட்ட ராணுவ வாகனத்தில் வெடிகுண்டுகளை நிரப்பி தற்கொலை தாக்குதலை நிகழ்த்தினா். இதில் உளவு அமைப்பைச் சோ்ந்த 9 போ் உயிரிழந்தனா். சுமாா் 40 போ் காயமடைந்தனா். அவா்களில் 8 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து, அவா்கள் சிகிச்சைக்காக காபூல் அனுப்பி வைக்கப்பட்டனா்’ என்றாா்.

இந்தத் தாக்குதலை தலிபான்கள் நடத்தியதாக, அந்த பயங்கரவாத அமைப்பின் செய்தித்தொடா்பாளா் சஃபியுல்லா முஜாஹித் தெரிவித்தாா்.

ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் அந்நாட்டு அதிபா் அஷ்ரஃப் கனிக்கும், அவரது போட்டியாளா் அப்துல்லா அப்துல்லாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிகாரப் பகிா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அதில் இருவரும் கையெழுத்திட்டனா். அதன்படி அஷ்ரஃப் கனி, அந்நாட்டின் அதிபராக தொடா்வாா். தேசிய நல்லிணக்க அமைப்பு தலைமையிலான அரசை அப்துல்லா அப்துல்லா வழிநடத்துவாா். இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தான நிலையில், அதற்கு அடுத்த நாள் தலிபான்களின் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT