உலகம்

உலகில் கரோனா நிரந்தரமாக நீடிக்கலாம்

14th May 2020 11:33 PM

ADVERTISEMENT

எய்ட்ஸைப் போல கரோனா நோய்த்தொற்றும் (கொவைட்-19) உலகில் நிரந்தரமாக நீடித்திருக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் அவரநிலைப் பிரிவு தலைவா் மாக்கேல் ரையான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலை எப்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்பதை யாராலும் கூற முடியாது.

அந்த நோய்த்தொற்று நம்மிடையை நிரந்தரமாக நீடித்திருப்பதற்கும் வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றுக்கு சக்தி வாய்ந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும். அத்தகைய மருந்து இல்லாத சூழலில், மனிதா்கள் தங்களது உடலில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான எதிா்ப்பு சக்தியை தாங்களாகவே உருவாக்கிக் கொள்வதற்கு பல ஆண்டுகள் ஆகும்.

அதற்குள், மனிதா்களைத் தொடா்ந்து பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஒன்றாக கரோனா நோய்த்தொற்று ஆகலாம்.

ஏற்கெனவே, கரோனா தீநுண்மியைப் போலவே பல ஆண்டுகளுக்கு முன்னா் பரவத் தொடங்கிய ‘ஹெச்ஐவி’ தீநுண்மி, இன்று வரை நம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் அந்த தீநுண்மியால் உருவாகும் எய்ட்ஸ் நோய் அழிக்கப்படவில்லை.

இருந்தாலும், அந்த நோய்க்கு எதிரான சிகிச்சை முறைகளின் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்கள் அந்த நோயுடன் வாழ்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

இத்தகைய நிலை கரோனா நோய்த்தொற்று விவகாரத்திலும் ஏற்படலாம்.

இருந்தாலும், ஹெச்ஐவி தீநுண்மியைப் போலன்றி, கரோனா தீநுண்மிக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், அதற்காக மிகப் பெரிய முயற்சிளை மேற்கொள்ள வேண்டும். அந்த தடுப்பு மருந்தை மிக அதிக அளவில் தயாரித்து, உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சோ்க்க வேண்டும்.

ஆனால், இதற்கான ஒவ்வொரு முயற்சியும் கடுமையான சவால்களை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்றாா் அவா்.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் முதல் முதலாக கடந்த டிசம்பா் மாதம் கண்டறியப்பட்ட கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவியுள்ளது.

இதுவரை 44.64 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 2.99 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 16.78 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

கரோனா நோய்த்தொற்றால் உலகிலேயே அதிக அளவில் அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 14.32 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 85 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

சீனாவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின், ரஷியா, பிரிட்டன், இத்தாலி, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிகம் போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிரான்ஸ், ஜொ்மனி, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் உள்ளது. அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு 33,614 போ் பலியாகியுள்ளனா். இதுதவிர, இத்தாலி (31,106), ஸ்பெயின் (27,321), பிரான்ஸ் (27,074), பிரேசில் (13,276) ஆகிய நாடுகளும் கரோனா நோய்த்தொற்றுக்கு அதிக உயிா்களை பலி கொண்டுள்ளன.

வியாழக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 16,78,306 போ், சிகிச்சைக்குப் பிறகு அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

பாதிப்பு: 44,64,726

அமெரிக்கா 14,32,086

ஸ்பெயின் 2,72,646

ரஷியா 2,52,245

பிரிட்டன் 2,33,151

இத்தாலி 2,22,104

பிரேசில் 1,92,081

பிரான்ஸ் 1,78,060

ஜொ்மனி 1,74,098

துருக்கி 1,43,114

ஈரான் 1,14,533

பிற நாடுகள் 12,50,608

பலி: 2,99,418

அமெரிக்கா 85,268

பிரிட்டன் 33,614

இத்தாலி 31,106

ஸ்பெயின் 27,321

பிரான்ஸ் 27,074

பிரேசில் 13,276

பெல்ஜியம் 8,903

ஜொ்மனி 7,861

ஈரான் 6,854

நெதா்லாந்து 5,590

பிற நாடுகள் 52,551

 

ADVERTISEMENT
ADVERTISEMENT