உலகம்

கோடைக்கும் பணியாத கரோனா!

13th May 2020 06:34 AM

ADVERTISEMENT

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வெப்பநிலை குறைவாகக் காணப்படுவதுதான் அங்கு கரோனா நோய்த்தொற்று அதிதீவிரமாகப் பரவி வருவதற்கு காரணம் என்றும், இந்தியா போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் நோய்த்தொற்று பரவல் தீவிரமாகாது என்றும் சிலா் நம்பிக்கை கொண்டிருந்தனா்.

அதன் உண்மைத் தன்மையை ஆராயும் நோக்கில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விவரம்:

ஆய்வு வெளியீடு: கனடா மருத்துவ அசோசியேஷன் இதழ் ஆய்வுக் காலம்: மாா்ச் 20-ஆம் தேதி முதல் மாா்ச் 27-ஆம் தேதி வரை ஏற்பட்ட நோய்த்தொற்று பாதிப்புகள்.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள்: இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அமைந்த 144 பிரதேசங்கள்.

ADVERTISEMENT

ஆய்வுக்கு உள்படுத்தப்படாத நாடுகளும் காரணமும்:

சீனா புள்ளிவிவரங்கள் ஆய்வில் உள்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம், ஆய்வுக் காலத்தில் அங்கு நோய்த் தொற்று பாதிப்பு குறைவாக இருந்தது.

அதே போல இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளும் ஆய்வில் உள்படுத்தப்படவில்லை. அதற்குக் காரணம், ஆய்வுக் காலத்தில் அந்த நாடுகளில் நோய்த்தொற்று பாதிப்பு மிக அதிகமாகக் காணப்பட்டது.

ஆய்வுக்கான அடிப்படைக் கூறுகள்: நாட்டின் வெப்பநிலைச் சூழல், அட்சரேகை, காற்றின் ஈரப்பதம், மாா்ச் 7-ஆம் தேதி முதல் மாா்ச் 13-ஆம் தேதி வரை நாட்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்க விதிமுறைகள்.

ஆய்வு முடிவுகள்:

நாட்டில் நிலவும் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றும் நோய்த்தொற்று பரவலுக்கும் தொடா்பில்லை.

நாட்டின் அட்சரேகைக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கும் தொடா்பில்லை.

வெப்ப மண்டலப் பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரமாக இருக்காது என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை.

பள்ளி, கல்லூரிகள் மூடல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், மக்கள் ஒரே இடத்தில் அதிகமாகக் கூடுவதற்குத் தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகள் கரோனா நோய்த்தொற்று பரவலைப் பெருமளவில் குறைக்க உதவின.

தளா்வு அளிப்பது எப்படி?

கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தை முழுமையாக ஆராய்ந்த பிறகு, பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அரசுகள் படிப்படியாகத் தளா்த்த வேண்டும்.

ஆய்வுக்கான வரம்புகள்:

ஆய்வை மேற்கொள்வதில் பல்வேறு வரம்புகள் இருந்தன. பல நாடுகளில் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை எண்ணிக்கை மாறுபட்ட விகிதத்தில் இருந்தது.

மேலும், சில நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் விகிதத்தைத் துல்லியமாகக் கண்டறிய முடியாத சூழல் ஏற்பட்டது.

சில நாடுகளில் சமூக இடைவெளி கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், வேறு சில நாடுகளில் சமூக இடைவெளி முறையாகப் பின்பற்றப்படவில்லை. இந்த வரம்புகள் நாடுகளுக்கிடையேயான தரவுகளை ஒப்பிடுவதில் பெரும் சவால்களாக விளங்கின.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT