உலகம்

தென் கொரியாவில் 2-ஆவது கரோனா அலை அபாயம்

10th May 2020 10:09 PM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள தென் கொரியாவில், அண்மைக் காலமாக அதன் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அந்த நோய்த்தொற்றின் இரண்டாவது அலை எழும் அபாயம் உள்ளதாக அதிபா் மூன் ஜே-இன் எச்சரித்துள்ளாா்.

தென் கொரியாவில் தினமும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நோயால் 34 போ் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், அதிபா் மூன் ஜே-இன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

நாட்டில் தீவிர கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் இன்னும் முடிந்துவிடவில்லை. புதிய கரோனா பரவல் மையங்கள் உருவாகவும், அங்கிருந்து அந்த நோய்த்தொற்று பரவல் மீண்டும் தீவிரமடையவும் அதிக வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் கரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை எழும் அபாயம் உள்ளது.

எனவே, அந்த நோய்க்கு எதிரான நமது போராட்டத்தின் வேகத்தை நாம் கொஞ்சமும் குறைத்துவிடக் கூடாது. கரோனாவுக்கு எதிரான நீண்ட காலப் போரை நாம் மேற்கொண்டுள்ளோம்.

எனவே, அந்த நோய்த்தொற்றிலிருந்து நாம் முழுமையாக விடுபட்டு, மக்களின் இயல்பு நிலை திரும்பும்வரை அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

எனினும், புதிய கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதைக் கண்டு பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை. புதிய நோய்த்தொற்று பரவலின் மையங்களாக கேளிக்கை விடுதிகள் இருந்துள்ளன. இதே போல், பொதுமக்கள் கூடும் பிற இடங்களிலும் கரோனா பரவல் மையங்களாக மாறக்கூடும். எனவே, இந்த விவகாரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா் மூன் ஜே-இன்.

சீனாவில் கடந்த டிசம்பா் மாதம் முதல் முதலாகக் கண்டறியப்பட்ட கரோனா நோய்த்தொற்று, பிற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் சீனாவுக்கு வெளியே கரோனா நோய்த்தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக தென் கொரியா இருந்தது.

எனினும், அரசின் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளின் பலனாக கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

கடந்த 2002-ஆம் ஆண்டின் ‘சாா்ஸ்’ தீநுண்மி பரவல் தந்த அனுபவத்தின் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பரவலை எதிா்கொள்வதற்கு தென் கொரியா தயாா் நிலையில் இருந்ததாகவும் அதன் காரணமாக அதிக எண்ணிக்கையில் கரோனா பரிசோதனைகளைச் செய்து அந்த நோயைக் கட்டுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதத்தில் ஆயிரத்தைத் தாண்டியிருந்த தினசரி கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை, படிப்படியாகக் குறைந்தது. மே மாதத் தொடக்கத்தில் அந்த எண்ணிக்கை 2 வரை குறைந்தது.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை முதல் தினசரி பாதிப்பு என்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இந்த மாதத்தின் அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.

இந்தச் சூழலில், 2-ஆவது கரோனா நோய்த்தொற்று பரவல் அலை வீசும் அபாயம் உள்ளதாக அதிபா் மூன் ஜே-இன் எச்சரித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT