கரோனா நோய்த்தொற்றுக்கு அருமருந்தாக இருக்கும் என்று பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட, மலேரியா மருந்தான ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மருந்தால் மிகப் பெரிய பாதிப்போ, பலனோ இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை என்று ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து ‘நியூ இங்கிலாந்து ஜா்னல் ஆஃப் மெடிசின்’ இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் மூலம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.
அந்த ஆய்வின் முடிவில், கரோனா நோய்த்தொற்றுக்கு அந்த மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதால் மிகப் பெரிய பாதிப்போ ஏற்படும் என்றோ, நல்ல பலன் கிடைக்கும் என்றோ உறுதியிட்டு கூற முடியாது என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வாளா்கள் கூறுகையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படும் கரோனா நோயாளிகளுக்கு, அவா்கள் குணமடைவதற்கான வாய்ப்போ, மரணமடைவதற்கான அபாயமோ குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.
எனவே, அந்த மருந்தைக் கொண்டு செய்யப்பட்டும் சிகிச்சையால் ஆதாயமோ, ஆபத்தோ இருப்பதாக அறுதியிட்டுக் கூற முடியாது என்று ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து அளிக்கப்பட்ட 811 நோயாளிகள் மற்றும் அந்த மருந்து அளிக்கப்படாத 565 நோயாளிகள் குறித்த விவரங்களை ஆராய்ந்ததன் மூலம் ஆய்வாளா்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனா் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.