உலகம்

வருத்தமும் மகிழ்ச்சியும் ஒரு சேரக் காணப்பட்ட துபை விமான நிலையம்

9th May 2020 03:04 PM

ADVERTISEMENT


துபையில் பணியாற்றி வேலை இழந்து அல்லது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தாயகம் திரும்ப வேண்டும் என்று புறப்பட்டவர்களில் பலருக்கு வருத்தமும், குடும்பத்தை சந்திக்கப் போகிறோமே என்ற மகிழ்ச்சியும் ஒரு சேரக் காணப்பட்டது.

இப்படி இருவேறு உணர்வுகளுடன் காணப்பட்ட ஏராளமான தமிழக மக்களை துபை விமான நிலையத்தில் காண முடிந்தது.

வெளி நாட்டில் பணிபுரியும் தமிழா்கள், தமிழகம் திரும்ப அனுமதி பெறுவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தனா். 

அவா்களில் துபையிலிருந்து முதல்கட்டமாக, வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 சிறப்பு விமானங்கள் மூலம், 359 பேரை சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

ADVERTISEMENT

இவர்களில் பலருக்கும் பல பல பின்னணிகள் உண்டு. அவர்களில் ஒருவர் ஜான் ஃபிலிப். சென்னை ஆவடியைச் சேர்ந்தவர். மற்ற அனைவரையும் விட மிக வித்தியாசமாகக் காணப்பட்டார். தற்காப்பு உடை, கண்ணாடி என மிகப் பாதுகாப்பாக தனது பயணத்தை அமைத்துக் கொண்டுள்ளார்.

"நான் எனது குடும்பத்தாரை மீண்டும் சந்திக்கப்போகிறேன். அவர்களது பாதுகாப்பு ரொம்ப முக்கியம். அதனால்தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

சில வேலை இழந்த தொழிலாளர்கள் தமிழகம் திரும்புவது குறித்துக் கூறுகையில், கனத்த இதயத்தோடு தான் துபையில் இருந்து கிளம்புகிறோம். எங்கள் வீட்டுக்குச் சென்று வாழ்க்கையை முதலில் இருந்து கட்டமைக்க வேண்டிய தருணம் இது. ஒரு வேளை நிலைமை சீரடைந்தால் மீண்டும் துபை வருவோம்" என்கிறார்கள்.

ஷேக் மீரான் (40), ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக பணியாற்றி தற்போது இந்தியா திரும்புகிறார்.

அது பற்றி அவர் கூறுகையில், துபையில் இருந்து கிளம்புவது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது பல வாழ்க்கை திட்டங்கள் தவிடுபொடியாகவிட்டன. தற்போது  நான் பணியாற்றி வந்த நிறுவனத்தில் வேலைகள் இல்லாததால் தாயகம் திரும்புகிறேன். ஆனால், துபை நிச்சயம் விரைவில் சீரடையும், எனது டிக்கெட் செலவைக் கூட நிறுவனமே ஏற்றுக் கொண்டது. தற்போது குடும்பத்தைச் சந்திக்கப் போகிறோமே என்ற சந்தோஷம் தான் அதிகமாக இருக்கிறது என்கிறார்.

இதுபோல கண்ட கனவுகள் கலைந்து, புதிய கனவுகளோடு தாயகம் திரும்பியிருக்கிறார்கள் நூற்றுக்கணக்கானோர்.

முதல் விமானம், சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் தரையிறங்கியது. அதில் 182 போ் வந்திறங்கினா். அவா்கள் அனைவருக்கும் வெப்பமானி மூலமாக உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும் அவா்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT