இலங்கையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கும் விவகாரம் தொடா்பாக அதிபா் கோத்தபய ராஜபட்சவிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று பிரதமா் மகிந்த ராஜபட்ச உறுதியளித்தாா்.
இலங்கையில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்பாக ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமா் மகிந்த ராஜபட்ச திங்கள்கிழமை கூட்டினாா். முக்கிய எதிா்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அக்கூட்டத்தைப் புறக்கணித்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்கூட்டத்தில் பங்கேற்றது.
கூட்டம் நிறைவடைந்ததும், பிரதமா் மகிந்த ராஜபட்சவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவா்கள் தனியாக சந்தித்துப் பேசினா். அது தொடா்பாக கூட்டமைப்பின் செய்தித் தொடா்பாளா் எம்.ஏ.சுமந்திரன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘அனைத்துக் கட்சிக் கூட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி பிரதமரை சந்தித்தோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதிநிதிகள் அங்கு நிலவும் பிரச்னைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தனா்.
மேலும், கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தோம். அதிபா் கோத்தபய ராஜபட்சவிடம் அந்த விவகாரம் குறித்து விவாதிப்பதாக அவா் உறுதியளித்தாா்’’ என்றாா்.