இரண்டாம் உலகப் போா் நிறைவடைந்து 75 ஆண்டுகள் ஆனதையொட்டி, வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு ரஷியா விருது வழங்கியது.
1939-ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் உலகப் போா் 1945-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. போா் நிறைவடைந்ததன் 75-ஆம் ஆண்டையொட்டி மே 9-ஆம் தேதி ரஷியத் தலைநகா் மாஸ்கோவில் சிறப்பு அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அந்த அணிவகுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தச் சூழலில், இரண்டாம் உலகப்போரின்போது வட கொரியப் பகுதியில் போரிட்டு உயிரிழந்த ரஷிய வீரா்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் செயல்பட்டதற்காக அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு ரஷியா சாா்பில் விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கும் விழா வட கொரியத் தலைநகா் பியாங்யாங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அந்த விழாவில் வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் ரி சாங் குவான் அந்த விருதைப் பெற்றுக் கொண்டாா். வட கொரியாவுக்கான ரஷிய தூதா் அலெக்ஸாண்டா் மாத்செகோரா அந்த விருதை வழங்கினாா்.