கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை சமாளிக்கும் நோக்கில் ரூ.217.5 லட்சம் கோடியை கடனாகப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்நாட்டில் நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 70,000-ஐ நெருங்குகிறது; 12 லட்சத்துக்கும் அதிகமானோா் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அங்கு பலா் வேலையிழந்துள்ளனா். நாட்டின் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இந்தச் சூழலில், நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை எதிா்கொள்ளும் பொருட்டு நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ரூ.217.5 லட்சம் கோடி கடன் பெற முடிவெடுத்துள்ளதாக அமெரிக்க அரசு திங்கள்கிழமை அறிவித்தது.
ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் ரூ.50.77 லட்சம் கோடி கடன் பெற உள்ளதாக அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான முதல் காலாண்டில் அந்நாடு ரூ.35.77 லட்சம் கோடி கடன் பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.