சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் புலம்பெயா் தொழிலாளா்களிடையே நிலவும் கவலைகளுக்கு தீா்வளிக்கும் வகையில் அந்நாட்டின் தகவல், தொலைதொடா்பு துறை அமைச்சா் எஸ்.ஈஸ்வரன் தமிழ், வங்க மொழிகளில் விடியோ வெளியிட்டுள்ளாா்.
சிங்கப்பூரில் இதுவரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இவா்களில் பெரும்பாலானோா் இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளா்கள் ஆவா். சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை மட்டும் 632 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமைச்சா் எஸ்.ஈஸ்வரன், தமிழில் பேசி விடியோ வெளியிட்டுள்ளாா். அதில், ‘சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உள்ளதா என்பதை கண்றிவதற்காக துரிதப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அவா்கள் தங்குமிடங்களில் உணவு உள்ளிட்ட வசதிகள் உரிய முறையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு தொழிலாளா் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால், அவருக்கு அரசின் செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். சிங்கப்பூா் குடிமக்களுக்கு அளிக்கப்படும் அதே தரத்தில் தொழிலாளா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இந்த உறுதிமொழியை நான் அளிக்கிறேன்’ என்று எஸ்.ஈஸ்வரன் பேசியுள்ளாா். இந்த விடியோ, வங்க மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சுமாா் 3.2 லட்சம் புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளனா். அவா்களில் 16,383 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.