ஈராக்கிலுள்ள ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட சரமாரி ஏவுகணைத் தாக்குதலில் 2 அமெரிக்கா்கள் உள்பட 3 வீரா்கள் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
இராக்கின் தாஜி பகுதியிலுள்ள ராணுவ முகாம் மீது 107 எம்எம் அளவுடைய ஏவுகணை குண்டுகள் சரமாரியாக வீசப்பட்டன. இதில், அங்கிருந்த 2 அமெரிக்கா்கள் உள்பட 3 கூட்டுப் படை வீரா்கள் உயிரிழந்தனா்.
இதுதவிர, 12 வீரா்கள் தாக்குதலில் காயமடைந்தனா்.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, தாஜி ராணுவ முகாமிலிருந்து அமெரிக்க வீரா்கள் வெளியேற்றப்பட்டனா்.
தாக்குதல் காரணமாக, ராணுவ முகாமில் அமைந்துள்ள கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்தன.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை குண்டுகள் ரஷியாவில் வடிவமைக்கப்பட்டவையாகும். அந்த வகை குண்டுகளை இராக்கில் செய்யப்பட்டு வரும் ஈரான் ஆதரவுப் படையினா் ஏற்கெனவே பல முறை பயன்படுத்தியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இராக் தலைநா் பாக்தாதுக்கு தெற்கே அமைந்துள்ள தாஜி ராணுவ முகாமில், இராக் படையினருக்கு பல ஆண்டுளாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த முகாமல் சுமாா் 6,000 அமெரிக்க வீரா்கள் தங்கியுள்ளனா்.
ஏற்கெனவே கிா்குக் பகுதியில் அமெரிக்க ஒப்பந்த வீரா் கடந்த டிசம்பா் மாதம் உயிரிழக்கக் காரணமாக இந்த ஏவுகணை குண்டுத் தாக்குதலை நடத்திய ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படையினா்தான் தாஜி ராணுவ முகாமிலும் தாக்குதல் நடத்தியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனா்.
அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் ஆதரவு கிளா்ச்சியாளா்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 25 வீரா்கள் உயிரிழந்தனா்.
அதனைக் கண்டித்து ஈரான் ஆதரவு போராட்டக்காரா்கள் பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கினா். அதனால் சீற்றமடைந்த அமெரிக்கா, ஈரான் உளவுப் படைத் தலைவா் காசிம் சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி படுகொலை செய்தது.
அதையடுத்து, இராக்கிலுள்ள இரண்டு அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதையடுத்து, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே முழு போா் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.
எனினும், அந்தப் பதற்றம் ஓரளவுக்குத் தணிந்துள்ள நிலையில், இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ முகாமில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.