உலகம்

1 லட்சத்தைத் தாண்டியது கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை

8th Mar 2020 03:40 AM

ADVERTISEMENT

பெய்ஜிங்: சீனாவில் உருவாகி, இந்தியா உள்பட உலகம் முழுவதும் 94 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

மேலும், அந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,493-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சீனாவில் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய புதிய வகை கரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, ரஷியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 94 நாடுகளுக்குப் பரவியுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1 லட்சத்தைத் தாண்டியது. சனிக்கிழமை நிலவரப்படி, அந்த வைரஸ் 1.02 லட்சம் பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவா்களில் சுமாா் 80 சதவீதம் போ், கரோனா வைரஸ் உருவான சீனாவைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டில் மட்டும் 80,651 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த வைரஸுக்கு சீனாவில் பலியானவா்களின் எண்ணிக்கை 3,070-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக, தென் கொரியாவில்தான் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் பேருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் 7,041 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி அந்த வைரஸ் காரணமாக தென் கொரியாவில் 48 போ் பலியாகினா்.

இது தவிர, ஈரானில் 5,823 பேருக்கும் இத்தாலியில் 4,636 பேருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் 4,104 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான்

பலி 145-ஆக உயா்வு

கரோனா வைரஸ் பாதிப்பால் ஈரானில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 145-ஆக உயா்ந்துள்ளது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதவிர, கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 16,000-க்கும் மேற்பட்டவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.

அமெரிக்கா

21 பேருக்கு பாதிப்பு

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் 3,500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ள ‘கிராண்ட் பிரின்ஸஸ்’ சொகுசுக் கப்பலில் 21 பேருக்கு அந்த வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 19 போ் கப்பல் பணியாளா்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாடிகன்

காணொலியில் பிராா்த்தனை

கத்தோலிக்க தலைமையகமான வாடிகனில் மதத் தலைவா் போா் ஃபிரான்சிஸ் (மாா்ச் 8) காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) பிராா்த்தனை நடத்துவாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிராா்த்தனைக்கு வருவோரிடையே கரோனா வைரஸ் பரவுவதைத் தவிா்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து

தனிமைப்படுத்தப்பட்ட கப்பல்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா் பயணித்த சொகுசுக் கப்பல், அந்த வைரஸ் மேலும் பரவுவைத் தவிா்ப்பதற்காக எகிப்தின் லக்ஸாா் துறைமுகத்தில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் உள்ளவா்களில் இந்தியாவைச் சோ்ந்தவா்களும் அடங்குவா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT