உலகம்

பாகிஸ்தானின் பங்குச் சந்தை கட்டடத்தில் தாக்குதல்: 4 பயங்கரவாதிகள் உள்பட 9 பேர் பலி

29th Jun 2020 02:54 PM

ADVERTISEMENT


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள பங்குச் சந்தை அலுவலகக் கட்டடத்தில் இன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் மற்றும் 5 பாதுகாப்புப் படையினர் பலியாகினர்.

பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்துக்குள் இன்று பயங்கர ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் நுழைந்தனர். கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் பாதுகாப்பு வீரர்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தியதாக கராச்சி நகர காவல்துறை உயர் கண்காணிப்பாளர் ஹைதர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் பயன்படுத்திய வாகனம்

கட்டடத்துக்குள் நுழைய முயன்ற இரண்டு பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். அதையும் தாண்டி கட்டடத்துக்குள் நுழைந்த இரண்டு பயங்கரவாதிகள், தாக்குதலுக்கு உள்ளான கட்டடத்துக்கு வரவழைக்கப்பட்ட துணை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்த பயங்கரவாதத் தாக்குதலில், பங்குச் சந்தை கட்டட அலுவலகத்தின் பாதுகாவலர்கள் மற்றும்  காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஒரு காவலர் உள்பட 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

காவல்துறை, ராணுவம், துணை ராணுவப் படையினர், அந்த அலுவலகக் கட்டடத்தை சுற்றி வளைத்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த கட்டடத்தின் முக்கிய சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : terror attack
ADVERTISEMENT
ADVERTISEMENT