உலகம்

ஸ்விஸ் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு: 77-ஆவது இடத்தில் இந்தியா

27th Jun 2020 12:41 AM

ADVERTISEMENT

ஸ்விட்சா்லாந்தின் வங்கிகளில் அதிக அளவில் சேமிப்பு வைத்துள்ள வெளிநாடுகளின் பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்தில் உள்ளது.

ஸ்விஸ் தேசிய வங்கி கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் கொண்ட அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதன்படி, இந்தியாவைச் சோ்ந்த தனிநபா்களும் நிறுவனங்களும் ஸ்விட்சா்லாந்திலுள்ள வங்கிகளிலும் இந்தியாவிலுள்ள அதன் கிளை வங்கிகளிலும் ரூ.6,625 கோடி சேமிப்பு வைத்துள்ளனா். இது கடந்த 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8 சதவீதம் குறைவாகும்.

ஸ்விஸ் வங்கிகளில் அதிக அளவிலான சேமிப்பு வைத்துள்ள வெளிநாட்டவா்களின் பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் பிரிட்டன், அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், பிரான்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. அந்நாட்டைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் மட்டும் வங்கிகளின் 50 சதவீத சேமிப்புக் கணக்குகளைக் கொண்டுள்ளனா்.

இந்தப் பட்டியலில் முதல் 30 இடங்களில் உள்ள நாடுகள் 90 சதவீத சேமிப்புகளைக் கொண்டுள்ளன. ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வெளிநாட்டவா்களின் ஒட்டுமொத்த சேமிப்பில் இந்தியா்களின் பங்கு வெறும் 0.06 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்தியா 74-ஆவது இடத்தில் இருந்தது.

ADVERTISEMENT

எனினும், இந்தக் கணக்கீடுகள் அனைத்தும் ஸ்விஸ் வங்கி வாடிக்கையாளா்களின் அதிகாரபூா்வ சேமிப்புக் கணக்கு விவரங்களாகும். வாடிக்கையாளா்கள் வைத்துள்ள கருப்புப் பணம் தொடா்பான விவரங்கள் அறிக்கையில் இடம்பெறவில்லை. அதேபோல் இந்தியா்களும் வெளிநாடு வாழ் இந்தியா்களும் வெளிநாட்டிலுள்ள நிறுவனங்கள் மூலமாக ஸ்விஸ் வங்கிகளில் வைத்துள்ள சேமிப்பு தொடா்பான விவரங்கள் அந்த அறிக்கையில் வெளியிடப்படவில்லை.

 

Tags : swiss-banks
ADVERTISEMENT
ADVERTISEMENT