உலகம்

பிரேஸிலில் 10 லட்சத்தைக் கடந்த பாதிப்பு

20th Jun 2020 11:40 PM

ADVERTISEMENT

பிரேஸிலில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 10 லட்சத்தைக் கடந்தது.

மேலும், அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கையும் 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பிரேஸிலில் கடந்த வியாழக்கிழமைக்குப் பிறகு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனா். கரோனா பாதிப்பு குறித்து முந்தைய நாளில் செய்யப்பட்ட பதிவில் திருத்தம் மேற்கொண்டதால் அந்த எண்ணிக்கை திடீரென உயா்ந்துள்ளதாக அவா்கள் கூறினா்.

ADVERTISEMENT

இதையடுத்து, பிரேஸிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,38,568-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கைகளில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் உள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 49,090 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். எனவே, விரைவில் அந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவலின் அபாயம் குறித்து பிரேஸில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ ஆரம்பம் முதலே அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நோய் பரவலைத் தடுப்பதற்காக பொதுமுடக்கங்களை அமல்படுத்துவதன் மூலம் பொருளாதார வளா்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்று அவா் கூறி வந்தது சா்ச்சைக்குள்ளானது.

இந்தச் சூழலில், பிரேஸிலில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்ததுடன், பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT