கடந்த 50 நாட்களாக கரோனா வைரஸ் தொற்று இல்லாத பெய்ஜிங் மாநகரில் ஜூன் 11ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களில் புதிதாக தொற்று இருப்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 13ஆம் தேதி வரை பெய்ஜிங்கில் புதிதாக மொத்தம் 43 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது, உறுதி செய்யப்பட்டது. பெய்ஜிங்கின் சிஃபாடி என்ற மிகப் பெரிய மொத்த விற்பனை சந்தை, புதிய சுற்று கரோனா தொற்றின் மையமாகக் கண்டறியப்பட்டது.
இது குறித்து சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் நிபுணர் வூ சுன் யோ கூறுகையில்,
மொத்த விற்பனை சந்தையில், உறை நிலையில் வைக்கப்பட்டிருக்கும் கடல் உணவுகள் பகுதியில், வைரஸ் இருக்க முடியும். மேலும் அங்கு அதிக மக்கள் சென்று வருவது, வைரஸ் பரவலின் வாய்ப்புகளை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
பெய்ஜிங்கில் கரோனா வைரஸ் பாதிப்பு திடீரென மீண்டும் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அவர் மேலும் கூறுகையில், பெய்ஜிங்கில் தற்போது வைரஸ் பரவியுள்ளதற்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு. முதலாவதாக, வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவுகளிலும் இறைச்சியிலும், வைரஸ் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
இரண்டாவதாக, வெளியூரிலிருந்து இச்சந்தைக்கு வந்தவர்களிடமிருந்து வைரஸ் பரவி இருக்கலாம். பெய்ஜிங்கின் நிலைமைக்கிணங்க முதலாவது காரணம் சாத்தியமாக இருக்க வாய்ப்புண்டு என்று சுட்டிக்காட்டினார்.
தற்போது வைரஸ் எங்கிருந்து வந்தது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வைரஸ் தொற்றுக் கொண்டோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களைத் தேடும் பணியில், பெய்ஜிங் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.