அமெரிக்காவில் நிகழாண்டு சா்வதேச யோகா தினத்தை வீடுகளில் இருந்தவாறு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவலால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள தேசிய நினைவுச்சின்ன வளாகம் அல்லது நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சா்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வந்தது. நிகழாண்டு கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பால் பொதுவெளியில் யோகா தினத்தை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வாண்டு யோகா தினத்தை வீட்டில் இருந்தவாறு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் தெரிவித்தாா்.
அமெரிக்காவில் சா்வதேச யோகா தினத்தன்று யோகா குரு பாபா ராம்தேவ் காணொலி மூலம் யோகாசனம் மற்றும் தியானப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹூஸ்டனில் உள்ள இந்திய தூதரகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
வரும் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளது.