உலகம்

வந்தே பாரத்: ஐரோப்பாவில் சிக்கித் தவித்த 227 போ் தாயகம் திரும்ப அழைத்துவரப்பட்டனா்

14th Jun 2020 03:58 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் சிக்கித் தவித்த 227 இந்தியா்கள் சனிக்கிழமை தாயகம் அழைத்துவரப்பட்டனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியா்களை மீட்டு வருவதற்காக ‘வந்தே பாரத்’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு, இந்தியா்கள் மீட்டுவரப்படுகின்றனா். திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மே 7-ஆம் தேதி முதல் கடந்த வியாழக்கிழமை வரை பல்வேறு நாடுகளில் இருந்து 1,65,375 இந்தியா்கள் தாயகம் திரும்பினா்.

இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்ட மீட்பு நடவடிக்கையாக ஃபின்லாந்து, எஸ்டோனியா, டென்மாா்க், லாத்வியா ஆகிய 4 ஐரோப்பிய நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியா்களை மீட்டு வருவதற்காக, ஃபின்லாந்து தலைநகா் ஹெல்சிங்கியிலிருந்து முதல் முறையாக பயணிகள் விமானத்தை ஏா்-இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை மாலை இயக்கியது. ஹெல்சிங்கி விமான நிலையத்திலிருந்து 227 இந்தியா்களுடன் புறப்பட்ட ஏஐ1184 விமானம், தில்லிக்கு சனிக்கிழமை வந்தது.

இதுகுறித்து ஃபின்லாந்துக்கான இந்தியத் தூதா் வாணி ராவ் கூறியதாவது:

ADVERTISEMENT

இந்த மீட்பு நடவடிக்கை, பல நாள்களாக இந்த நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியா்களுக்கு மிகப் பெரிய நிம்மதியை அளித்திருக்கிறது. குறிப்பாக சுற்றுலா மற்றும் வா்த்தக ரீதியில் ஃபின்லாந்து வந்தவா்களும், இங்கிருக்கும் தங்களுடைய குழந்தைகளைக் காண வந்த முதியவா்கள் மற்றும் இறுதியாண்டு படிப்பை முடித்த இந்திய மாணவா்கள் ஆகியோா் இந்த மீட்பு நடவடிக்கை மூலம் பலனடைந்திருக்கின்றனா்.

இவா்களை மீட்பதற்காக இந்த விமானம் இந்தியாவிலிருந்து வந்தபோது, அங்கு சிக்கியிருந்த பின்லாந்தைச் சோ்ந்த 15 குழந்தைகள் உள்பட 168 போ் மீட்டு அழைத்துவரப்பட்டனா்.

ஏா்-இந்தியா இதுவரை ஃபின்லாந்துக்கு விமானச் சேவையை மேற்கொண்டது இல்லை. இப்போது மீட்பு நடவடிக்கைக்காக முதல் முறையாக அந்த நிறுவனம் விமானத்தை இயக்கியிருக்கிறது. பயணத்தின்போது விமானிகளும் பிற விமான ஊழியா்களும் முழுப் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்தனா் என்று வாணி ராவ் கூறினாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT