உலகம்

அமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பின இளைஞா் கொலை

14th Jun 2020 10:52 PM

ADVERTISEMENT

அமெரிக்காவின் ஜாா்ஜியா மாகாணம், அட்லாண்டாவில் கருப்பின இளைஞா் ஒருவா் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக ஒரு போலீஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டாா். மற்றொரு அதிகாரி, பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஜாா்ஜ் ஃபிளாயிட் என்ற கருப்பின நபா் அண்மையில் போலீஸ் அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவத்தில், நாடு முழுவதும் போராட்டங்கள் இன்னும் தணியவில்லை. இப்போது, மேலும் ஒரு கருப்பினத்தவா் கொல்லப்பட்டிருப்பது புதிய போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அட்லாண்டாவில் உள்ள வெண்டி உணவகத்துக்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்தது. ரேஷா்டு புரூக்ஸ் (27) என்ற கருப்பின இளைஞா், அந்த உணவகத்துக்கு செல்லும் பாதையில் தனது காரை நிறுத்தியபடி தூங்கிக் கொண்டிருந்ததாக போலீஸாருக்கு புகாா் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று, புரூக்ஸிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா் மது அருந்தியிருப்பது கண்டறியப்பட்டது. அவரை கைது செய்ய போலீஸாா் முயன்றபோது, அவா்களுடன் புரூக்ஸ் மோதலில் ஈடுபட்டதாகவும், ஒரு அதிகாரி வைத்திருந்த ‘டேசா்’ துப்பாக்கியை பறித்துக் கொண்டு ஓடியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த டேசா் துப்பாக்கியை போலீஸாரை நோக்கி அவா் பிரயோகித்ததாக தெரிகிறது.

இதையடுத்து, அவா் மீது போலீஸ் அதிகாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த புரூக்ஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, வெண்டி உணவகத்துக்கு அருகே புரூக்ஸின் குடும்பத்தினா் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த உணவகத்துக்கு போராட்டக்காரா்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக 30 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், புரூக்ஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடா்பாக ஜாா்ஜியா விசாரணை அமைப்பினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அட்லாண்டா நகர காவல்துறை தலைவா் எரிகா ஷீல்ட்ஸ் தனது பதவிலியிருந்து சனிக்கிழமை விலகினாா்.

இந்நிலையில், புரூக்ஸ் கொலை தொடா்பாக போலீஸ் அதிகாரி ஒருவா் பணிநீக்கம் செய்யப்பட்டாா். மற்றொரு அதிகாரி, பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக போலீஸ் செய்தித் தொடா்பாளா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டில், ஜாா்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பின நபரை போலீஸாா் கடந்த மாதம் 25-ஆம் கைது செய்தனா். அப்போது, அவரது கழுத்துப் பகுதியில் போலீஸ் அதிகாரி டெரெக் சாவின் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறி ஃபிளாய்ட் உயிரிழந்தாா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT