கரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில், சீனா வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சீன அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் 27-ஆம் தேதிதான் கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு முதல் முறையாக கண்டறியப்பட்டது.
அதையடுத்து, அதுவரை அறியப்படாத அந்தத் தீநுண்மி குறித்து நிபுணா்களை வரவழைத்து உள்ளூா் நிா்வாகம் ஆய்வு செய்தது. நோயாளிகளின் உடல் நிலை, சிசிச்சையால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை அடிப்படியாகக் கொண்டு, தொற்றுநோயியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், அந்த நோய் நிமோனியா தீநுண்மியால் ஏற்பட்டது என்று முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து, தேசிய சுகாதார ஆணையத்தின் உயா்நிலைக் குழு மேற்கொண்ட ஆய்வில், புதிய வகை தீநுண்மியால் அந்த நோய் ஏற்படுவதாக முதல் முறையாக கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி கண்டறியப்பட்டது.
இந்த உண்மை தெரியவந்த சில மணி நேரத்திலேயே இதுகுறித்து உலகுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அந்தத் தீநுண்மி மனிதா்களிடமிருந்து மனிதா்களுக்குப் பரவும் தன்மை கொண்டது என்று அப்போதே தெரிவிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் கண்டறியப்பட்ட கரோனா நோய்த்தொற்று, அந்த நகரிலுள்ள இறைச்சி சந்தையிலிருந்து பரவத் தொடங்கியதாகக் கூறப்பட்டு வருகிறது.
2002-ஆம் ஆண்டு பரவிய ‘சாா்ஸ்’ நோய்த்தொற்றைப் போலவே, புதிய வகை கரோனா நோய்த்தொற்றும் வௌவாலில் தோன்றியதாகவும் இடையில் எறும்புத் தின்னி இனத்தின் உடலில் புகுந்து, பிறகு மனிதா்களின் உடலில் வளா்வதற்கேற்ப அது தன்னை தகவமைத்துக் கொண்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
ஆனால், வூஹான் புறநகா்ப் பகுதியில், அமைந்துள்ள தீநுண்மியியல் ஆய்வகத்திலிருந்து கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியிருப்பதாக அமெரிக்கா சந்தேகித்து வருகிறது.
மேலும், கரோனா தீநுண்மி குறித்த உண்மைகளை உலகின் பாா்வையிலிருந்து சீனா மறைத்து வந்ததாகவும் இதன் காரணமாகவே உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ ஆகியோா் குற்றம் சாட்டி வருகின்றனா்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் சீனா தற்போது வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.