உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) பலியானவா்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் கரோனா வைரஸால் இதுவரை பலியாகியுள்ளனர். உயிரிழப்புகள் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலும் கரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவையும் சந்தித்துள்ளது.
உலகளவில் தற்போது வரை கரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 70,91,634 ஆக உள்ளது. இதுவரை 406,192 பேர் பலியாகியுள்ளனர். 34,61,061 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 53,753 பேரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகிலேயே கரோனா வைரஸால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது.
அங்கு பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 20,07,449ஆக இருக்கிறது. வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 1,12,469ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 6,91,962 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் ரஷ்யா (4,67,673 பேர் பாதிப்பு) இருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியா தற்போது 6வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 257,486 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.