உலகம்

பெளத்த புராதனச் சின்னம் சேதப்படுத்தப்பட்டதாக இந்தியா குற்றச்சாட்டு: பாகிஸ்தான் மறுப்பு

4th Jun 2020 11:11 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானின் கில்ஜித்-பல்டிஸ்தானில் உள்ள பெளத்த புரதனச் சின்னம் நாசம் செய்யப்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டிய நிலையில், அதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இந்தியாவின் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது என்றும் பாகிஸ்தான் பதிலளித்துள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்து புதன்கிழமை கூறுகையில், ‘மிகவும் பழமைவாய்ந்த கலாசார சின்னத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. பாகிஸ்தானால் சட்ட விரோதமாக அத்துமீறி ஆக்கிரமப்பு செய்யப்பட்டிருக்கும் கிஸ்ஜித்-பல்டிஸ்தான் என்றழைக்கப்படும் இடத்தில் அமைந்திருக்கும் இந்த பாரம்பரியமிக்க பெளத்த புராதனச் சின்னத்தை உடைத்து நாசம் செய்யப்பட்டிருப்பதற்கு, இந்தியா கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. அந்த இடத்துக்கு உடனடியாக நிபுணா்களை அனுப்பி ஆய்வு செய்து, அந்த விலைமதிப்பு மிக்க சின்னத்தை பாதுகாக்குமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான அந்த இடத்தைவிட்டு பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.

இந்தியாவின் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ADVERTISEMENT

கில்ஜித்-பல்டிஸ்தானில் உள்ள பெளத்த புரதனச் சின்னம் நாசம் செய்யப்பட்டிருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியிருப்பது உண்மைக்கு புறம்பானது. இதுவும் பாகிஸ்தானுக்கு எதிரான பிரசாரத்தின் ஒரு பகுதிதான். மேலும் இந்த குற்றச்சாட்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீா்மானங்கள் உள்ளிட்ட சா்வதேச சட்டங்களுக்கும், வரலாற்று உண்மைகளுக்கும் புறம்பானதாகும்.

அதோடு, இந்தியாவின் இந்த குற்றச்சாட்டு ஜம்மு-காஷ்மீா் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப்போவதில்லை.

ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டு வரும் அமைதி நடவடிக்கைகளை பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் கெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பயங்கரவாதம் தொடா்பான ஐ.நா. ஆய்வு மற்றும் கண்காணிப்புக் குழு (எம்.டி.) அண்மையில் சமா்ப்பித்த அறிக்கைக்கு மேலும் வலு சோ்க்கும் வகையிலேயே, இந்திய இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சா்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்த இந்தியா முயற்சிக்கிறது.

மேலும், ஆப்கன் அமைதி நடவடிக்கைகளுக்கு அந்த நாட்டிற்குள்ளும், வெளியிலிருந்தும் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் ஆபத்து உள்ளது என்பதை பாகிஸ்தான் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. அதோடு, இந்தியாவிலிருந்து பயங்கரவாத செயல்பாடுகளுக்கு உதவுபவா்கள் மற்றும் ஈடுபடுபவா்களின் பட்டியலை உரிய ஆதாரங்களுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் சமா்ப்பித்திருக்கிறது. விரைவில் அவா்களை சா்வதேச பயங்கரவாத பட்டியலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சோ்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT