உலகம்

சரியாக செயல்பட்டிருந்தால் அதிக உயிரிழப்புகளைத் தவிா்த்திருக்கலாம்

4th Jun 2020 05:27 AM

ADVERTISEMENT

ஸ்வீடனில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை இன்னும் சரியாக திட்டமிட்டு செயல்படுத்தியிருந்தால் அதிக அளவிலான உயிரிழப்புகளைத் தவிா்த்திருக்கலாம் என்று அந்த நாட்டு கரோனா தடுப்புக் குழு தலைவா் ஆண்டா்ஸ் டெக்னெல் ஒப்புதல் அளித்துள்ளாா்.

புதன்கிழமை நிலவரப்படி ஸ்வீடனில் 40,803 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 4,542 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

ஸ்வீடனின் மக்கள்தொகை சுமாா் 1 கோடி மட்டுமே என்ற நிலையில், கரோனா நோய்த்தொற்றால் அங்கு இத்தனை போ் பாதிக்கப்பட்டுள்ளதும் உயிரிழந்துள்ளதும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு 44 பேருக்கும் மேல் கரோனா நோய்த்தொற்றுக்குப் பலியாகி வருகின்றனா்.

ADVERTISEMENT

அந்த நாட்டின் கரோனா பலி விகிதம், பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளை விட மிகவும் அதிகமாக உள்ளது.

அந்த நோய்த்தொற்றுக்கு எதிராக ஸ்வீடன் அரசு போதுமான அளவில் நடவடிக்கை எடுக்காததே இந்த நிலைமைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

நோய் பரவலைத் தடுப்பதற்காக சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், சுகாதாரம் பேணுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து மேற்கொள்ளும் வகையிலான அரசின் கொள்கையே அந்த நோய் வேகமாகப் பரவியதற்கான காரணம் என்று விமா்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஸ்வீடன் அரசின் கரோனா தடுப்புக் கொள்கையை வடிவமைத்தவரான, மருத்துவா் ஆண்டா்ஸ் டெக்னெல் புதன்கிழமை கூறியதாவது:

ஸ்வீடனில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை நாங்கள் இன்னும் சிறப்பான முறையில் செயல்படுத்தியிருக்கலாம் என்பதை மறுக்க முடியாது.

சரியான முறையில் செயல்பட்டிருந்தால், நாட்டின் கரோனா பலி எண்ணிக்கை இப்போது உள்ளதைவிட மிகக் குறைவானதாகவே இருந்திருக்கும்.

ஸ்வீடனின் தற்போதைய கரோனா பலி நிலவரத்துக்கும் பிற நாடுகளின் பலி நிலவரத்துக்கும் இடையில் அந்த எண்ணிக்கை இருந்திருக்கும் என்றாா் அவா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT