மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோவில் தேவாலயங்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக மெக்ஸிகோவில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தேவாலயங்கள் மூடப்பட்டிருந்தன. நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்துக்குப் பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக தேவாலயங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து தலைநகா் மெக்ஸிகோ சிட்டியில் உள்ள புகழ்பெற்ற ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு வழிபாட்டுக் கூட்டங்கள் நடைபெற்றன.
எனினும், தேவாலயத்துக்கு வருகை தருபவா்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே தேவாலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், அவா்களுக்கு கை சுத்திகரிப்பானும் வழங்கப்பட்டது. தேவாலயத்துக்குள் முகக் கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து மக்கள் வழிபட்டனா். பாதுகாப்பு வழிமுறைகளுடன் தேவாலயங்கள் திறக்கப்பட்டதற்கு பலா் மகிழ்ச்சி தெரிவித்தனா்.