உலகம்

செங்டு நகரில் அமெரிக்க துணைத் தூதரகம் மூடல்: சீனா பதிலடி

28th Jul 2020 07:02 AM

ADVERTISEMENT


பெய்ஜிங்/செங்டு: சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் திங்கள்கிழமை முறைப்படி மூடப்பட்டதைத் தொடர்ந்து, தூதரக கட்டடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன துணைத் தூதரகம் மூடப்பட்டதற்குப் பதிலடியாக சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மூடப்பட்டது. 

அதன்பிறகு சீன அதிகாரிகள் தூதரக கட்டடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "செங்டுவில் உள்ள துணைத் தூதரகமானது திபெத் உள்ளிட்ட மேற்கு சீனாவில் உள்ள மக்களுடனான எங்களது உறவின் மையமாக 35 ஆண்டுகளாக இருந்து வந்தது. 

ADVERTISEMENT

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். முக்கியமான இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களை சீனாவில் உள்ள பிற தூதரக அலுவலகங்கள் மூலம் சென்றடைய முயல்வோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க துணைத் தூதரகம் மூடப்பட்ட நிகழ்வைக் காண அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். 1985-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தூதரகத்தில் உள்ளூரை சேர்ந்த 150 பணியாளர்கள் உள்பட 200 பேர் பணியாற்றி வந்தனர்.

கரோனா நோய்த்தொற்று விவகாரத்தை சீனா கையாண்ட விதம் குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்ததிலிருந்தே இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 
இதன் தொடர்ச்சியாக, ஹூஸ்டனில் உள்ள சீன துணைத் தூதரகத்தைப் பயன்படுத்தி அந்நாடு உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி அத்தூதரகத்தை மூடுவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். 

அதன்படி, அத்தூதரகம் ஜூலை 25-ஆம் தேதி மூடப்பட்டது. இதற்குப் பதிலடியாக சிசுவான் மாகாணத் தலைநகரான செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை சீனா மூடியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT