மெல்போா்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவாக 532 பேருக்கு திங்கள்கிழமை ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அந்த மாகாணத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பலா் தொடா்ந்து பணிக்குச் செல்வதே நோய்த்தொற்று பரவுவதற்கு முக்கியக் காரணம் என்று மாகாண மூத்த அதிகாரி தெரிவித்தாா்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக விக்டோரியா மாகாணம் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு கரோனா நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் 6 வார பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாகாணம் முழுவதும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கடந்த வாரம் கட்டாயமாக்கப்பட்டது.
எனினும், விக்டோரியா மாகாணத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடா்ந்து தீவிரமடைந்து வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 6 போ் திங்கள்கிழமை ஒரே நாளில் உயிரிழந்தனா். விக்டோரியா மாகாணத்தில் சமூகப் பரவல் காணப்படுவதால் மக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்படுமாறு ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளாா்.