உலகம்

அமெரிக்க போர்க் கப்பலின் மாதிரியை அழித்து பயிற்சி: ஈரான் திட்டம்?

28th Jul 2020 07:01 AM

ADVERTISEMENT


துபை: அமெரிக்க விமானம்தாங்கி கப்பலின் மாதிரி வடிவத்தை தயார் செய்து அதை ஹோர்முஷ் நீரிணைக்கு கொண்டு சென்றுள்ளது ஈரான். இந்த மாதிரி கப்பலை அழித்து ஈரான் ராணுவம் பயிற்சியில் ஈடுபடப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக 2018-ஆம் ஆண்டு மே மாதம் அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதிலிருந்தே அமெரிக்கா, ஈரான் இடையே மோதல் போக்கு எழுந்துள்ளது. 

மேலும், ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி இராக்கில் அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்டதும், அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

 2015-ஆம் ஆண்டு இதேபோல் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானுக்கும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கும் சிக்கல் எழுந்தபோது, ஒரு போர்ப் பயிற்சியில் ஈரான் ஈடுபட்டது. 
அதன்படி, போலியாக ஒரு விமானம்தாங்கி கப்பலை வடிவமைத்து, அதை ராக்கெட்டுகள், தரையிலிருந்து கடலுக்குப் பாயும் ஏவுகணைகள் ஆகியவற்றின் மூலம் அழித்து பயிற்சி மேற்கொண்டது. 
இப்போதும், அணுசக்தி பேச்சுவார்த்தை சிக்கலில் உள்ளதையடுத்து அதேபோன்ற ஒரு பயிற்சிக்கு ஈரான் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில், அமெரிக்காவின் நிமிட்ஸ் வகை விமானம்தாங்கி கப்பலைப் போன்ற ஒரு கப்பலை ஈரான் வடிவமைத்து, அதை ஹோர்முஷ் நீரிணைப் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது அமெரிக்காவை சேர்ந்த ஒரு விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுத்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

ஈரானின் அரசு ஊடகமோ, அதிகாரிகளோ இதை இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. பஹ்ரைனை தளமாகக் கொண்டு மத்தியகிழக்கு கடல்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையின் 5-ஆவது பிரிவும் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை.

ஈரான் தயாரித்துள்ள விமானம்தாங்கி கப்பலில் 16 மாதிரி போர் விமானங்கள் இருப்பதாகவும், அந்தக் கப்பல் 200 மீட்டர் நீளமும், 50 மீட்டர் அகலமும் உள்ளதாகவும் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. உண்மையான நிமிட்ஸ் வகை கப்பலின் நீளம் 300 மீட்டர், அகலம் 75 மீட்டராகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT