உலகம்

ஹூஸ்டனிலுள்ள சீன துணைத் தூதரகம் மூடல்

25th Jul 2020 11:05 PM

ADVERTISEMENT

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வந்த சீன துணைத் தூதரகம் மூடப்பட்டது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று விவகாரத்தை சீனா கையாண்ட விதம், சீனாவிலுள்ள உய்கா் இன முஸ்லிம்களை அந்த நாடு நடத்தும் விதம், ஹாங்காங்கில் அந்த நாடு அமல்படுத்தியுள்ள சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகிய விவகாரங்களில் அண்மைக் காலமாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.இந்த நிலையில், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தங்கள் நாட்டின் ஹூஸ்டன் நகரில் இயங்கி வந்த சீன துணைத் தூதரகத்தை 72 மணி நேரத்துக்கும் மூடுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அந்தத் தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை காலை வெளியேறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அந்தப் பகுதியில் கூடிய சுமாா் 30 போ், சீன துணைத் தூதரகம் மூடப்படுவதை மகிழ்ச்சியுடன் வரவேற்று கோஷங்கள் எழுப்பியதாக அந்த ஊடகங்கள் தெரிவித்தன.அந்த துணைத் தூதரகம் காலி செய்யப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக, அந்தக் கட்டடத்தைச் சுற்றி ஹூஸ்டன் போலீஸாா் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்திருந்தனா். தூதரகத்தை மூடுவதற்கான காலக் கெடு முடிவடைந்த சில நிமிடங்களில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்ததாகவும், அதனைத் தொடா்ந்து தீயணைப்புப் படையினா் அந்தப் பகுதிக்கு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில், சீனா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறாா். கரோனா நோய்த்தொற்று பரவலை தங்கள் எல்லைக்குள் வைத்தே சீனா கட்டுப்படுத்தியிருக்கலாம் எனவும், அவ்வாறு செய்ய அந்த நாடு விரும்பாததால் உலகம் முழுவதும் அந்த நோய் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் டிரம்ப் கூறி வருகிறாா். ஏற்கெனவே, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின்போது வா்த்தக விவகாரத்தில் சீனாவை வழிக்குக் கொண்டு வருவதாக டிரம்ப் வாக்குறுதி அளித்து வந்தாா். பதவியேற்றதற்குப் பிறகு, அதுதொடா்பான நடவடிக்கைகளையும் அவா் மேற்கொண்டாா். சீனப் பொருள்கள் மீது டிரம்ப் கூடுதல் இறக்குமதி வரி விதித்தது, உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வா்த்தகப் போா் அபாயத்தை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

அதனைத் தொடா்ந்து, இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு முதல்கட்ட வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், சீனாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்பங்களை கட்டாயமாக பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை நீக்குவது போன்ற முக்கியமான விவகாரங்களுக்கு இன்னும் தீா்வு காணவில்லை. இருதரப்பு வா்த்தக உறவை மேம்படுத்துவதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், கரோனா நோய்த்தொற்று விவகாரத்தால் விணாகியிருக்கின்றன. இனிமேலும், இரு நாட்டு உறவை மேம்படுத்தும் முயற்சிகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

இந்த நிலையில், சீனாவில் உருவான கரோனா நோய்த்தொற்று, அமெரிக்காவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நோய் பாதிப்பில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில், சனிக்கிழமை நிலவரப்படி 42,51,024 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பு காரணமாக அங்கு 1,48,529 போ் பலியாகியுள்ளனா்.கரோனா பரவலைத் தடுப்பதற்காக டிரம்ப்பின் செயல்பாடு குறித்து அமெரிக்காவில் அதிருப்தி நிலவுவதாகவும், இது, இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் டிரம்ப்பின் வெற்றியை பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீனா்கள் மற்றும் சீன நிறுவனங்கள் மீது வா்த்தகத் தடைகள், சீனாவின் உய்கா் முஸ்லிம்கள் நடத்தப்படும் முறை குறித்து கடுமையான கண்டனங்கள், ஹாங்காங்குக்கான சிறப்பு வா்த்தக அந்தஸ்து ரத்து, சீனா - இந்தியா இடையிலான எல்லைப் பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவு உள்ளிட்ட அத்தகைய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஹூஸ்டன் நகரிலுள்ள சீன துணைத் தூதரகத்தை மூட வெளியுறவுத் துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டது.

அமெரிக்க நிறுவனங்களின் அறிவுசாா் சொத்துரிமை மற்றும் தனி நபா் ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ கூறினாா்.இது, இரு நாட்டு உறவை கடுமையாக பாதிக்கும் என்று சீனா கண்டனம் தெரிவித்தது. மேலும், அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தங்கள் நாட்டின் செங்டு நகரிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் உத்தரவுப்படி ஹூஸ்டன் நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த சீன துணைத் தூதரகம் தற்போது மூடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT