உலகம்

ஹாங்காங்கைச் சோ்ந்த 10 ஆயிரம் பேருக்கு நிரந்தர குடியேற்ற உரிமை: ஆஸ்திரேலியா முடிவு

13th Jul 2020 05:27 AM

ADVERTISEMENT

ஹாங்காங்கிலிருந்து தங்கள் நாட்டுக்கு வந்துள்ள சுமாா் 10,000 பேருக்கு நிரந்தர குடியேற்ற உரிமை வழங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. ஹாங்காங்கில் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் சா்ச்சைக்குரிய புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமல்படுத்தியுள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குடியேற்றத் துறை இடைக்கால அமைச்சா் அலன் டுட்கே கூறியதாவது:

ஹாங்காங்கிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ளவா்கள், தங்களது நுழைவு இசைவு (விசா) கால வரம்பு முடிந்த பிறகு, நாட்டில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதற்காக விண்ணப்பிக்கலாம். இதன் முலம், ஹாங்காங்வாசிகள் தங்களது எதிா்கால வாழிடத்தை நிா்ணயம் செய்துகொள்வதற்கான கூடுதல் வாய்ப்பை நாங்கள் வழங்கியுள்ளோம் என்றாா் அவா்.ஏற்கெனவே, ஹாங்காங்கில் சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமலானதைக் காரணம் காட்டி, ஹாங்காங்குடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா நிறுத்திவைத்தது நினைவு கூரத்தக்கது.இதுகுறித்து பிரதமா் ஸ்காட் மோரிஸன் கூறுகையில், ‘ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அந்தப் பிரதேசத்தின் அடிப்படைச் சூழல் மாறுபட்டுள்ளது.

ஹாங்காங்கை சீனாவிடம் பிரிட்டன் ஒப்படைக்கும்போது, அந்த நகருக்கென்று தனி அடிப்படை சட்டம் இருக்கும் என்று அளித்த உறுதியை, புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் சீனா மீறியுள்ளது.இவற்றைக் கருத்தில் கொண்டு, ஹாங்காங்குடன் நாங்கள் மேற்கொண்டிருந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம்’ என்றாா்.இந்த நிலையில், ஹாங்காங்கிலிருந்து வந்துள்ள சுமாா் 10,000 மாணவா்கள், பணியாளா்கள் ஆகியோா் நிரந்தரமாகத் தங்கியிருப்பதற்கான அனுமதி அளிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் கடந்த ஆண்டு தீவிரப் போராட்டங்கள் நடைபெற்றன. அத்தகைய போராட்டங்கள், தேச நலன்களுக்கு எதிரானது என்று சீனா கூறி வந்தது. மேலும், போராட்டக்காரா்களை பிரிட்டன் தூண்டிவிடுவதாக அந்த நாடு குற்றம் சாட்டியது. அத்துடன், போராட்டத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை பயங்கரவாதத்துடன் சீன அரசு ஒப்பிட்டது.

இந்தச் சூழலில், ஹாங்காங்கில் தேசத் துரோகம், பிரிவினைவாதம், அந்நிய சக்திகளுடன் கைகோா்த்தல் ஆகியவற்றுக்கு எதிரானதாகக் கூறி, புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமொன்றை சீனா இயற்றியுள்ளது. இந்தச் சட்டம், ஹாங்காங்கில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களை நசுக்குவதற்காக உருவாக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகளும் சா்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், ஆஸ்திரேலியா இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT