உலகம்

கரோனா எங்கே உருவானது? ஆராய சீனா சென்றது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு

11th Jul 2020 03:10 PM

ADVERTISEMENT

 

கரோனா நோய்த் தொற்றின் தோற்றம் பற்றியும் அந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அறிவதற்காக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு வெள்ளிக்கிழமை சீனாவுக்குச் சென்றுள்ளது.

சீனாவில் வூஹானில் தோன்றிப் பரவிய கரோனா தொற்று பற்றிய விவரங்களை வெளியிட சீனா தொடர்ந்து தாமதித்துவந்த நிலையில் இந்த நிபுணர் குழு சீனா சென்றடைந்தது.

விலங்குகள் நலத்துறை நிபுணர், தொற்றுநோய் துறை நிபுணர்கள் சீனாவின் பல்வேறு துறை நிபுணர்களை பெய்ஜிங்கில் சந்தித்து, கரோனா நோய் பரவல் குறித்து ஆராய்ந்து சில முக்கியப் பகுதிகளை நேரில் பார்வையிட்ட உள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

முக்கியமாக இந்த கரோனா வைரஸ், ஏதேனும் உயிரினத்திடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியதா இல்லையா? ஆம் என்றால், அது எந்த உயிரினத்திடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதை ஆராய்வதே நிபுணர் குழுவின் முக்கிய நோக்கமாகும் என்றும் உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் மார்கரெட் ஹாரீஸ் ஜெனிவாவில் தெரிவித்துள்ளார்.

"நிமோனியா தொற்று" பற்றி உலக சுகாதார அமைப்புக்கு வூஹான் மாநகர சுகாதாரக் குழு அறிக்கையளித்தது. கடந்த ஜனவரி மாதத்தில், மிக விரைவாக பன்னாட்டு நிபுணர் குழுவொன்று சீனாவுக்குச் செல்லும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்திருந்த நிலையில்,  ஏறத்தாழ 6 மாதங்களுக்குப் பிறகு சீனாவுக்கு இந்த நிபுணர் குழு சென்றுள்ளது. 

உலகம் முழுவதும் 1.26 கோடி பேருக்கு கரோனா நோய்த் தொற்றியுள்ளது. இந்தத் தொற்றுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT